நண்பர்களுடன் தகராறு: வாலிபர் கொலை
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் ஓட ஓட விரட்டி வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரமக்குடி முத்தாலம்மன் கோயில் படித்துறை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் மகன் கார்த்திகேயன் 23. பிளக்ஸ் கடையில் டிசைனராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு காய்கறி மார்க்கெட் பகுதியில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். பரமக்குடி டவுன் போலீசார் மூன்று பேரை கைது செய்தனர்.
போலீசார் கூறியதாவது:
கொலை செய்யப்பட்ட கார்த்திகேயன், அழகர் நண்பர்கள். இவர்களிடையே முன் விரோதம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு முத்தாலம்மன் கோயில் அருகில் சமரசம் ஏற்படுத்தும் விதமாக அழகர் தரப்பை சேர்ந்தவர்கள் உட்பட மூன்று பேருடன் கார்த்திகேயன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. நண்பர்கள் கார்த்திகேயனை கொலை செய்ய முயன்றதால் அவர் தப்பி ஓடினார். காய்கறி மார்க்கெட் பகுதியில் வாள், அரிவாள் மற்றும் கத்தியால் தலை, முகம் மற்றும் உடல் முழுவதும் வெட்டியதில் சம்பவ இடத்தில் கார்த்திகேயன் பலியானார்.
இது தொடர்பாக பரமக்குடி சிங்காரத்தோப்பு வினோத் 33, பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்த 18 வயது சிறுவன், எல்.ஐ.சி., பகுதி சிவகுரு 28, ஆகிய மூவரை கைது செய்துள்ளோம் என்றனர்.