தொழிலாளி மர்ம மரணம்: 3 பிரிவுகளில் வழக்கு பதிவு

ஈரோடு லக்காபுரம் தொழிலாளி மரணம் தொடர்பாக, மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிந்தனர்.
ஈரோடு அடுத்த லக்காபுரம், கரட்டாங்காட்டை சேர்ந்தவர் முருகேசன், 47, கூலி தொழிலாளி. திருச்செங்கோடு, விட்டம்பாளையத்தை சேர்ந்த கந்தசாமி தோட்டத்தில் கூலி வேலை செய்தார். கந்தசாமியிடம், முருகேசன் முன் பணமாக ரூ.40 ஆயிரம் பெற்றதாக தெரிகிறது.

முருகேசனுக்கு உடல் நலம் சரியில்லாததால், கரட்டாங்காட்டிற்கு அக்டோபரில் வந்துள்ளார். ஒரு மாதமாக பணிக்கு வராத நிலையில், கந்தசாமி, தனது உறவினர் கணபதி மற்றும் இருவரை அழைத்து கொண்டு கரட்டாங்காட்டிற்கு கடந்த, 8ல் வந்துள்ளனர்.


அங்கிருந்து முருகேசனை விட்டம்பாளையத்துக்கு அழைத்து சென்றனர். 8ம் தேதி மாலை முருகேசன் மகன் அரவிந்தசாமிக்கு போன் செய்து, தந்தையை அழைத்து செல்லுமாறு கந்தசாமி தெரிவித்துள்ளார். ரூ.40 ஆயிரம் வாங்கியதற்கு பாண்டு பத்திரத்தில் கந்தசாமி, அரவிந்தசாமியிடம் கையெழுத்து வாங்கியுள்ளார். பின் முருகேசன் தன் மகன் அரவிந்தசாமியுடன் வீட்டுக்கு அன்று இரவு சென்றார். உடல் வலிப்பதாக கூறி ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்ந்த முருகேசன் மறுநாள் இறந்தார்.
அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள், நண்பர்கள் கடந்த, 10ல் ஈரோடு அரசு மருத்துவமனையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். 11ல் தமிழ் புலிகள் சார்பில் மறியலில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் முருகேசன் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
போலீசார் கூறுகையில்,' முருகேசன் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். இதற்கு டாக்டர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அவரது உடலில் காயங்கள் ஏதும் இல்லை' என்றனர்.
இந்நிலையில், கந்தசாமி உள்ளிட்ட மூவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், ஆள் கடத்தல் ஆகிய பிரிவுகளின் கீழும், முருகேசன் இறப்பு இயற்கை மரணமாகவும் மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement