ஒற்றை தந்தத்துடன் சுற்றி வரும் 'பீமா'
ஹாசன்: வனத்துறையினர் ஒரு பக்கம் தேடிக் கொண்டிருக்க, தந்தத்தை உடைந்த காட்டு யானை, கிராமப்புற பகுதிகளில் நடமாடியதால், கிராமத்தினர் அச்சம் அடைந்துள்ளனர்.
ஹாசன் மாவட்டம், பேலுார் தாலுகாவில் மூன்று நாட்களுக்கு முன்பு, வனப்பகுதியில் இருந்து கேப்டன், பீமா ஆகிய இரு காட்டு யானைகள் வெளியேறின. இந்த யானைகள், ஜகபோரனஹள்ளி கிராமத்துக்குள் புகுந்தன. முதலில் கேப்டன் யானை ஊருக்குள் வந்தது. அதனை பின் பீமா வந்தது.
ஊருக்குள் வந்த சிறிது நேரத்தில் இரு யானைகளும் திடீரென மோதிக் கொண்டன. இதில் 'பீமா'வின் இடதுபுற தந்தம் உடைந்தது. வனத்துறையினர் வைத்த வெடி சத்தத்தில் யானைகள் தனியே பிரிந்து வனத்துக்குள் சென்றன.
காயமடைந்த 'பீமா' யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். அதைத் தேடி அவர்கள் அலைந்தனர். ஆனால், 'பீமா' மீண்டும் ஜகபோரனஹள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் முகத்தில் ரத்தம் வடிந்தபடி சுற்றித்திரிந்தது. தந்தம் உடைந்து, காயம் ஏற்பட்ட பகுதியில் அவ்வப்போது தனது தும்பிக்கையால் தடவியபடி செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தற்போது யானை சென்ற திசை குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.