தங்கை மகனை தாக்கிய மாமா மச்சான் கைது

நெலமங்களா: பெங்களூரில் சொத்து பிரச்னை காரணமாக, தங்கையின் மகனை தாக்கிய ஓய்வு பெற்ற சப் - இன்ஸ்பெக்டர், அவரது மகன் கைது செய்யப்பட்டனர்.

நெலமங்களாவின் சிக்கபிதரகல்லுவில் வசித்து வருபவர் விவேக், 35. இவருக்கும் இவரது தாய் மாமாவான மாதநாயகனஹள்ளியை சேர்ந்த ஓய்வு பெற்ற சப் - இன்ஸ்பெக்டர் ஜெயண்ணாவுக்கும் இடையே குடும்ப சொத்து தொடர்பாக நீண்ட நாட்களாக பிரச்னை இருந்து வருகிறது.

நேற்று காலை விவேக் வீட்டுக்கு, ஜெயண்ணாவும், அவரது மகன் விஸ்வாசும் சென்றனர். அப்போது சொத்து தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

கோபம் அடைந்த ஜெயண்ணாவும், விஸ்வாசும், இரும்பு ராடு, உருட்டுக் கட்டையால் விவேக் தாக்கினர். இதில் தலையில் பலத்த காயமடைந்து விவேக் மயக்கம் அடைந்தார். இதையடுத்து தந்தையும், மகனும் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

அங்கிருந்தவர்கள், விவேக்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக, மாதநாயகனஹள்ள போலீசில், விவேக் குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜெயண்ணா, விஸ்வாசை கைது செய்தனர்.

Advertisement