ஜடேஜா ஜாலி... ஈடனில் 'சுழல்' சூறாவளி

கோல்கட்டா: கோல்கட்டா டெஸ்டில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 'சுழல்' ஜாலம் நிகழ்த்திய ரவிந்திர ஜடேஜா, 4 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 159 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. முதல் நாள் முடிவில் இந்திய அணி 37/1 ரன் எடுத்து, 122 ரன் பின்தங்கியிருந்தது.
ஹார்மர் அபாரம்
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. இந்திய பேட்டர்கள் விரைவாக வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர். சைமன் ஹார்மர் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் (29) சிக்கினார். கேப்டன் சுப்மன் கில் (4) 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். மஹாராஜ் ஓவரில் ரிஷாப் பன்ட் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். மஹாராஜ் பந்தில் ராகுல் (39) அவுட்டானார். தனது விளாசலை தொடர்ந்த ரிஷாப் பன்ட் மீண்டும் மஹாராஜ் ஓவரில் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பாஷ் பந்தில் ரிஷாப் (27) அவுட்டாக, ஸ்கோர உயர வாய்ப்பு இல்லாமல் போனது. ஹார்மர் பந்துவீச்சில் துருவ் ஜுரல் (14), ரவிந்திர ஜடேஜா (27), அக்சர் படேல் (16) வெளியேறினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 189 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 30 ரன் முன்னிலை பெற்றது.
விக்கெட் சரிவு
பின் களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி, இந்திய 'சுழலில்' சிதறியது. குல்தீப் பந்தில் ரிக்கிள்டன் (11) எல்.பி.டபிள்யு., ஆனார். ஜடேஜா பந்தில் மார்க்ரம் (4) அவுட்டானார். தொடர்ந்து சுழலில் மிரட்டிய ஜடேஜாவின் ஒரே ஓவரில் முல்டர் (11), ஜோர்ஜி (2) சிக்க, இந்திய ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர். ஜடேஜா பந்தில் ஸ்டப்ஸ் (5) போல்டானார். மறுபக்கம் அக்சர் பந்தில் கைல் (9) போல்டானார். குல்தீப் யாதவ் வலையில் யான்சென் (13) சிக்கினார். இரண்டாவது நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி இரண்டாவது இன்னிங்சில் 93/7 ரன் எடுத்து, 63 ரன் மட்டும் முன்னிலை பெற்றிருந்தது. தனிநபராக போராடிய கேப்டன் பவுமா (29), பாஷ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.
இன்று எஞ்சிய 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தும் பட்சத்தில், இந்திய அணி எளிய இலக்கை விரட்டி வெற்றி பெறலாம்.

ராகுல் 4,000 ரன்
டெஸ்டில் 4,000 ரன் எட்டிய 18வது இந்திய வீரரானார் ராகுல். 2014ல் அறிமுகமான இவர், இம்மைல்கல்லை எட்ட அதிக நாள் (3977 நாள்) எடுத்துக் கொண்ட இந்திய வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார். முதலிடத்தில் மொகிந்தர் அமர்நாத் (6214 நாள்) உள்ளார். ராகுல் இதுவரை 66 டெஸ்டில் 4,024 ரன் எடுத்துள்ளார்.

ரிஷாப் 92 'சிக்சர்'
டெஸ்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்கள் வரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார் ரிஷாப் பன்ட் (92 சிக்சர்). அடுத்த இடத்தில் சேவக் (90), ரோகித் சர்மா (88), ரவிந்திர ஜடேஜா (80), தோனி (78) உள்ளனர்.

4000 ரன்+ 300 விக்கெட்

டெஸ்டில் 4000 ரன்+ 300 விக்கெட் சாய்த்த 4வது ஆல்-ரவுண்டரானார் ரவிந்திர ஜடேஜா (88 போட்டி, 4017 ரன், 342 விக்.,). முதல் மூன்று இடத்தில் கபில்தேவ் (இந்தியா, 131 போட்டி, 5,248, 434), இயான் போத்தம் (இங்கி., 102 போட்டி, 5200, 383), வெட்டோரி (நியூசி., 113 போட்டி, 4531, 362) உள்ளனர்.
* இந்த இலக்கை விரைவாக எட்டிய 2வது வீரர் ஜடேஜா (88 டெஸ்ட்). முதலிடத்தில் போத்தம் (72 டெஸ்ட்) உள்ளார்.
* இந்திய மண்ணில் டெஸ்டில் 250+ விக்கெட் வீழ்த்திய நான்காவது வீரர் ஜடேஜா (250 விக்.,). முதல் 3 இடங்களில் அஷ்வின் (383), கும்ளே (350), ஹர்பஜன் (265) உள்ளனர்.

அச்சுறுத்தும் ஆடுகளம்

கோல்கட்டா ஈடன் கார்டன் ஆடுகளத்தில் இரண்டாவது நாளிலேயே வெடிப்பு ஏற்பட, சுழலுக்கு சாதகமாக மாறியது. 15 விக்கெட்டுகள் சரிந்தன. இது குறித்து இந்திய பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் கூறுகையில்,''நேர்மையாக சொன்னால், இவ்வளவு விரைவாக ஆடுகளம் மோசமடையும் என எதிர்பார்க்கவில்லை. முதல் 2 மணி நேரம் நன்றாக தான் இருந்தது. திடீரென களத்தின் தன்மை மாறியது அதிர்ச்சியாக இருந்தது. திட்டமிட்டு ஆடினால், சிறப்பாக பேட் செய்ய முடியும் என்பதை பவுமா நிரூபித்தார்,''என்றார்.

சுப்மன் கில் காயம்

நேற்று சைமன் ஹார்மர் வீசிய பந்தை (34.5) 'ஸ்வீப்' ஷாட் மூலம் பவுண்டரிக்கு அனுப்பினார் இந்திய கேப்டன் சுப்மன் கில். அப்போது கழுத்து பகுதியில் பிடிப்பு ஏற்பட, வலியால் அவதிப்பட்டார். 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் பெவிலியன் திரும்பினார். பேட்டிங் செய்ய மீண்டும் வரவில்லை. பின் கழுத்து அசையாமல் இருக்க சிறப்பு 'காலர்' அணிந்து, 'ஸ்டிரெச்சரில்' வீரர்களுக்கான ஆம்புலன்ஸ் மூலம் உட்லண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தற்காலிக கேப்டன் பொறுப்பை ரிஷாப் பன்ட் ஏற்றார்.
பி.சி.சி.ஐ., வெளியிட்ட செய்தியில்,'மருத்துவ குழுவினரின் கண்காணிப்பில் உள்ளார் சுப்மன் கில். இவரது உடநிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து இன்று போட்டியில் பங்கேற்பது பற்றி முடிவு செய்யப்படும்,'என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பவுலிங் பயிற்சியாளர் மார்னே மார்கல் கூறுகையில்,''சுப்மன் கில்லுக்கு எப்படி கழுத்து பிடிப்பு ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டும். இரவு துாங்கும் போது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். இதற்கு பணிச்சுமை காரணம் அல்ல. அவர் மிகவும் 'பிட்' ஆன வீரர்,''என்றார்.

பவுலிங் சாதகம்
இந்திய வீரர் அக்சர் படேல் கூறுகையில்,''ஈடன் கார்டன் ஆடுகளத்தின் ஒரு முனையில் பந்து நன்கு சுழல்கிறது. மறுமுனையில் 'பவுன்ஸ்' ஆகிறது. கணித்து பேட் செய்வது கடினம். தாக்குதல் பாணியில் விளையாடுவது தான் சிறந்தது. மோசமாக வீசப்படும் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட வேண்டும். பவுலர்களுக்கு சாதகமாக ஆடுகளம் உள்ளது. தென் ஆப்ரிக்க அணியை 125 ரன்னுக்குள் கட்டுப்படுத்திவிட்டால், இந்தியா எளிதாக 'சேஸ்' செய்து வெல்லலாம்,''என்றார்.

Advertisement