இளைஞர்களுக்கு கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும் : கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேச்சு

ராமநாதபுரம்: ''குழந்தைகளுக்கு நாட்டின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் தெரிவித்தார்.

சென்னை பாதுகாப்புத்துறை கணக்கு கட்டுப்பாட்டு அலுவலகம், தமிழ்நாடு, புதுச்சேரி கடற்படை தலைமையகம் சார்பில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர் முகாம் பாதுகாப்புத்துறை கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் தலைமையில் ராமநாதபுரத்தில் நடந்தது.

இதில் கடற்படை தலைவர் சதீஷ் ஷெனாய் பேசியதாவது: நாட்டிற்காக உயிர்தியாகம் செய்தவர்களின் ஆன்மா என்றும் நம்முடன் வாழும். அவர்களின் தியாகம் நாட்டில் பல தலைமுறைகள் அமைதியுடன் வாழ வழி வகுத்துள்ளது. உயிர் தியாகம் செய்தவர்களின் மனைவிகள் பதக்கங்களுடன் பங்கேற்பது இந்தியர்களின் தியாகத்தை அடையாளம் காட்டுகிறது.

படை வீரர்களின் தியாகத்தை போற்ற வேண்டியது நாட்டின் கடமை. அந்த வகையில் முப்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள், அவர்களின் குடும்பத்திற்கான ஓய்வூதியம் சார்ந்த குறைகளை தீர்க்க மாவட்ட அளவில் முகாம் நடத்தப்படுகிறது. உலகின் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இளைஞர்களின் சராசரி வயது விகிதம் 28.5 சதவீதமாக உள்ளது.

இளைஞர்கள் தங்களது பொறுப்புகளை உணர வேண்டும். மேலைநாட்டு கலாசாரத்தின் தாக்கத்தால் ஆன்லைன் சூதாட்டம், போதைப்பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் கலாசாரம், பண்பாடு, நலனில் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளுக்கு நாட்டின் பாரம்பரியத்தை கற்பித்து இந்தியாவின் மகிமையை மீட்டெடுக்க வேண்டும். இந்தியா தனது நுாற்றாண்டை 2047 ல் நிறைவு செய்யும் போது போதையில்லா சமூகம் கட்டமைக்க உறுதி ஏற்போம் என்றார்.

கணக்கு கட்டுப்பாட்டாளர் ஜெயசீலன் ஓய்வூதியர்கள் குறைகளை தீர்க்கும் நடைமுறை, ஓய்வூதிய திட்ட சிறப்பம்சங்கள் குறித்து விளக்கினார். துணை கணக்கு கட்டுப்பாட்டாளர் சங்கீதா, ஐ.என்.எஸ்., பருந்து கடற்படை விமான தள கமாண்டர் அர்ஜூன் மேனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement