நகராட்சிக்கு கட்டணம் செலுத்தியும் இடம் தர மறுப்பதாக சாலையோர வியாபாரிகள் புகார்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகராட்சிக்கு ஆண்டு கட்டணம் செலுத்தியும், பஸ் ஸ்டாண்டில் இடம் தர மறுப்பதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சாலையோர வியாபாரிகள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட சாலையோர விற்பனையாளர் சங்கம் சார்பில் சங்கதலைவர் ஆலடி ஈஸ்வரன், செயலாளர் முத்துவிஜயன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்தானம் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனை சந்தித்து புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இடையூறு இல்லாத வகையில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். நகராட்சி கமிஷனரிடம் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கலெக்டர் கூறியுள்ளார்.
சாலையோர விற்பனையாளர் சங்க மாவட்ட செயலாளர் முத்துவிஜயன் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய பஸ் ஸ்டாண்ட் சாலையோரம் கிழங்கு, வெள்ளரிக்காய், ஆப்பிள், கடலை விற்பனையில் 80க்கு மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக சாலையோர வியாபாரிகள் நகராட்சிக்கு ஆண்டு கட்டணமாக ரூ.1900 வரை செலுத்தி ரசீது வாங்கியுள்ளனர்.
தற்போது பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் செய்ய விடாமல் தடுக்கின்றனர். கடன் வாங்கி தொழில் செய்யும் பெண்கள் வட்டி கட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும். மக்கள், வாகனங்களுக்கு எந்த இடையூறும் இல்லாத வகையில் வியாபாரம் செய்வார்கள் என்றார்.
மேலும்
-
பன்றி வளர்ப்போருக்கு ஆணையர் எச்சரிக்கை
-
போக்குவரத்து போலீஸ்காரராக மாறிய பா.ஜ., - எம்.எல்.ஏ., சுரேஷ்குமார்
-
குடிநீர் கசிவை தடுக்க திட்டம் 'புளூ போர்ஸ்' இன்று துவக்கம்
-
காங்., வி.சி., ஆர்வம் திட்டக்குடியில் களம் இறங்கப்போவது யார்?
-
பஸ் ஊழியர்கள் ஊதிய திருத்தம் விரைவில் ஆலோசனை கூட்டம்
-
மழையால் வெளி மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி பாதிப்பு