ரேஷன் கடைகளில் மளிகை பொருட்களை வாங்க கட்டாய படுத்துறாங்க! வேண்டா வெறுப்புடன் வாங்கி செல்லும் மக்கள்

அருப்புக்கோட்டை: மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில்அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் போது ளிகை பொருட்களை வாங்க விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்துவதால் மக்கள் வேண்டா வெறுப்புடன் வாங்கி செல்கின்றனர். மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


விருதுநகர் மாவட்டத்தில் ஆயிரத்து 100 ரேஷன் கடைகள் உள்ளன. விருதுநகர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் கீழ் இயங்குகின்றன.

இவற்றின் மூலம் ரேஷன் கடைகளுக்கு அரிசி பருப்பு, சீனி உள்ளிட்ட அத்தியாயவசிய பொருட்களை வழங்கப்படுகிறது. இதுதவிர கூட்டுறவு சங்கத்தின் மூலம் நேரடியாக ஒரு சில கடைகளில் மளிகை பொருட்களும் விற்கப்படுகின்றன.

ரேஷன் கடைகளுக்கு பிராண்டட் இல்லாத மார்க்கெட்டில் மவுசு இல்லாத நிறுவனங்களில் இருந்து சோப்புகள், பேஸ்டுகள் , மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கி, ரேஷன் கடை விற்பனையாளர்களை விற்க கட்டாயப்படுத்துகின்றனர்.

அவர்களும் மக்களிடம் அரிசி, கோதுமை, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் போது சோப்புகள், பேஸ்டுகள், டீத்தூள் ஆகியவற்றை வாங்க கட்டாயப்படுத்துவதால், விற்பனையாளர்களுக்கும் மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

ஒரு சில கடைகளில் மக்கள் வேறு வழியின்றி பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். இது போன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்பது கட்டாயம் இல்லை.

விரும்பினால் வாங்கிச் செல்லலாம். கூட்டுறவு சங்கங்களின் முன்னேற்றத்திற்காகவும் நிர்வாக செலவுகளுக்காகவும் அரசிடம் பெருமானியத்தை குறைத்திடும் நோக்கில் இது போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த பொருட்களை தேவைப்பட்டால் ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கலாம் கட்டாயம் இல்லை என அதிகாரிகள் கூறுகின்றனர்.

இருப்பினும் பல ரேஷன் கடைகளில் இது போன்ற பொருட்களை வாங்க கட்டாய படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

அருப்புக்கோட்டையில் உள்ள ரேஷன் கடைகளில் ரேஷன் பொருட்களுடன் பிற பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துகின்றனர்.

இதனால் ரேஷனை வாங்கும் ஏழைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Advertisement