திருக்குறளுக்கு 'பொருள்குறள்' எழுதி தமிழுக்கு மகுடம் சூட்டிய தையல் தொழிலாளி

உலகப்பொதுமறையான திருக்குறளுக்கு அறிஞர்கள், புலவர்கள், கவிஞர்கள் என நுாற்றுக்கணக்கானோர் அவரவர் சிந்தனை, கொள்கைகளுக்கு ஏற்ப விளக்க உரை எழுதி உள்ளனர். தமிழ் மீதுள்ள ஆர்வத்தால் 6ம் வகுப்பு மட்டுமே படித்த ஏழை தையல் தொழிலாளி ஒருவர், திருக்குறளுக்கு வெண்பா இலக்கண தவறு இல்லாமல், பொருள்குறள் எழுதி அரிய சாதனை படைத்து தமிழன்னைக்கு அணிகலன் சேர்த்துள்ளார். இவர் தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டியை சேர்ந்த 60 வயது சங்கரபாண்டியன்.

'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு' என்ற குறளுக்கு

''அகரம் எழுத்துக்களின் மூலம் அகிலத்தின்

மூல முதலாம் இறை'' என பொருட்குறள் எழுதியுள்ளார். இவ்வாறு 1330 திருக்குறளுக்கும் வெண்பா இலக்கணம் மாறாமல் பொருட்குறளை, கவிதை வடிவில் உரையாக எழுதி உள்ளார். ''திருக்குறளும் பொருட்குறளும்'' என்பது புத்தகத்தின் பெயர்.

வெண்பாவில் தவறு இல்லாமல் எழுதுவது கடினம். ஆனால் ஆரம்ப கல்வியான ஆறாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் அனைத்து குறளுக்கும் இலக்கண பிழை இல்லாமல் வெண்பாவில் எப்படி பொருட்குறள் எழுதியுள்ளார் என தமிழறிஞர்கள் ஆச்சரியப்படுகின்றனர்.

தமிழ் மீது ஆர்வத்தால் ஒவ்வொரு வரிகளுக்கும் அகராதியை புரட்டி அர்த்தம் கண்டுபிடித்து, அதன் இலக்கணத்தை அறிந்து, மனதில் பதிவு செய்வார். இதன் விளைவாக 2018ல் அறத்துப்பால் அதிகாரத்திற்கு வெண்பா வடிவில் பொருள்குறள் எழுதி முதல் புத்தகம் வெளியிட்டார். 2024ல் திருக்குறள் முழுமைக்கும் வெண்பாவில் பொருள்குறள் எழுதி சாதித்துள்ளனர்.

சங்கரபாண்டியன் கூறுகையில் 'தையல் கடையில் வேலை செய்து கொண்டே தமிழ் இலக்கியம் கற்க ஆர்வம் ஏற்பட்டது. இலக்கண, இலக்கியத்தின் உச்சமான வெண்பாவில் கவிதை வடிவம் உள்ளதை அறிந்து எழுத ஆசை ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவரிடம் இலக்கணத்தில் அசை பிரித்தல் என்றால் என்ன, நேர், நிரை அசை அளவீட்டு வாய்ப்பாடு விபரம் கேட்டு இரவில் எழுதி பார்ப்பேன்.

பல நாள் இரவு துாங்காமல் பயிற்சி பெற்று தவறு இல்லாமல் எழுதக் கற்றேன். 10 ஆண்டுகளாக தமிழறிஞர்கள், கவிஞர்களிடம் விளக்கம் கேட்டு, கேட்டு தெளிவு பெற்றேன். அதன் விளைவாக இன்று வெண்பா வடிவில் பொருள்குறள் எழுதி உள்ளேன். 2024 தஞ்சை தமிழ்மன்றம், பிரான்ஸ் தமிழ் நெஞ்சம் அமைப்புகள் எனது முயற்சியை பாராட்டி 'வெண்பா வித்தகர்' என்ற பட்டம் வழங்கி கவுரவித்துள்ளனர் என்றார்.

இந்நுால் பற்றி பெரும்புலவர் ராஜரத்தினம் கூறுகையில், ''தமிழ் இலக்கணங்களில் பழமையான 'யாப்பருங்கலக் காரிகை' நுால் படித்தால்தான் வெண்பா மாறாமல் குறள் எழுத முடியும். 'காரிகை கற்று கவிதை பாடுவதினும் பேரிகை கொட்டி பிழைப்பது மேல்'. அதாவது யாப்பிலக்கணம் படித்து கவிதை எழுதுவதை விட, தெருத்தெருவாய் முரசு கொட்டி பிழைப்பது மேல் என்பது இதன் விளக்கம். இவ்வளவு கடினமான இலக்கணத்தையும் ஆரம்ப கல்வி மட்டுமே படித்த சங்கரபாண்டியன் 'தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் என்ற வெண்பா வாய்ப்பாட்டில் பிழையின்றி 1330 குறளுக்கும் பொருள்குறள் எழுதியுள்ளார்.

இவர் எழுதிய பொருட்குறள்களை நான் படித்து தவறு உண்டா என ஆராய்ந்தேன். எங்கேயும் இல்லை. இதுவரை தமிழ் மொழிக்கு யாரும் செய்யாத அருந்தொண்டு. இந்நுால் தமிழன்னைக்கு மேலும் ஒரு புதிய அணிகலன்,'' என்றார்.

சங்கரபாண்டியனின் முயற்சியை பாராட்ட 99528 95010 ல் அழைக்கலாம்.

Advertisement