ஆசைப்பட்டது 10 ரூபாய்... இழந்தது 15 ஆயிரம் ரூபாய்!

கோவை: சினிமா தியேட்டரில் கூடுதல் பார்க்கிங் கட்டணம் வசூலித்ததால், இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது.

தர்மபுரி மாவட்டம், புளியம்பட்டியை சேர்ந்தவர் வல்லரசு. கோவை, பி.என்.புதூர் மாலிலுள்ள தியேட்டரில், 2025, மே 1ல் படம் பார்க்க சென்றார்.

பைக்கை அங்குள்ள வளாகத்தில் நிறுத்தி டோக்கன் பெற்றார். 4 மணி நேரத்துக்கு 10 ரூபாய் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், கூடுதல் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் கூடுதலாக, 10 வசூலிக்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தனர்.

படம் முடிந்து பைக்கை வெளியில் செல்லும்போது, 20 ரூபாய் கட்டணம் வசூலித்தனர். ஆனால், மூன்று மணி, 51 நிமிடத்திற்குள் திரும்பி வந்து பைக்கை எடுத்தும், கூடுதலாக 10 ரூபாய் வசூலித்தனர்.

இது பற்றி கேட்ட போது, முறையான பதில் அளிக்கவில்லை; கூடுதல் கட்டணத்தையும் திருப்பித்தரவில்லை. இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரி டம் கூடுதலாக வசூலித்த, 10 ரூபாயை திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 10,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.

Advertisement