மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பு; ரஷ்ய ராணுவ மூத்த அதிகாரி பலி
மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுவெடிப்பில் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையேயான போர், நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது. இருதரப்பிலும் ஏராளமான வீரர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஆனால், அதைப் பொருட்படுத்தாமல் இருதரப்பிலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தலைநகர் மாஸ்கோவில் காருக்கு அடியில் வைக்கப்பட்ட குண்டு வெடித்ததில், ரஷ்யாவின் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். நேற்று காலை, யாசெனேவா சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காரை, ராணுவ பயிற்சி இயக்குநரகத்தின் தலைவரான பனில் சர்வரோவ் ஓட்ட முயன்றார்.
கார் நகர்ந்த போது அடியில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியது. இதில், சர்வரோவ் உடல் சிதறி பலியானார். இது ஒரு திட்டமிட்ட படுகொலை என்று ரஷ்யா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்தத் தாக்குதல் உக்ரைன் உளவுப் படையினரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்று ரஷ்ய விசாரணைக் குழு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் தரப்பிலோ இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை. ஆனால், கடந்த 2022-ல் உக்ரைனை ஆக்கிரமித்ததில் இருந்து ரஷ்யாவுக்குள் பல உயரதிகாரிகள் மீது, இதுபோன்ற தாக்குதல்கள் நடந்துள்ளன.
கடந்த ஆண்டு டிசம்பரில் லெப்டினென்ட் ஜெனரல் இகோர் கிரில்லோவ், ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்ட குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அந்த தாக்குதலுக்கு உக்ரைன் உளவுப் பிரிவு பொறுப்பேற்றது.
இதேபோன்று கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்கோ அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் மற்றொரு ராணுவ ஜெனரல் யாரோஸ்லாவ் மொஸ்காலிக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement