சிறுமி பாலியல் வழக்கில் ராஜூ பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள்; 5 மாதங்களில் தீர்ப்பு

1

திருவள்ளூர்: சிறுமி பாலியல் வழக்கில் ராஜூ பிஸ்வகர்மாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.




கடந்த ஜூலை 12ம் தேதி திருவள்ளூர் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டு இருந்த 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாக யார் அந்த வாலிபர் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் தொடக்கத்தில் போலீசார் திணறினர்.கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தை கடந்து ஆந்திரா, கர்நாடகாவிலும் தேடுதல் வேட்டை நடந்தது.



இதன் பலனாக, ஆந்திராவின் சூலூர்பேட்டையில் ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த அசாமைச் சேர்ந்த ராஜூ பிஸ்வகர்மா, 35, என்பவர் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணையானது திருவள்ளூர் மாவட்ட போக்சா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.



இந் நிலையில், இந்த வழக்கில் கைதான ராஜூ பிஸ்வகர்மா மீதான பாலியல் குற்றம் நிரூபணமானதை அடுத்து, அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் இன்று (டிச.24) தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.


கிட்டத்தட்ட 5 மாதங்களிலே அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்து, தீர்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது, குறிப்பிடத்தக்கது.

Advertisement