டில்லி மெட்ரோ ரயில் விரிவாக்கம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: டில்லி மெட்ரோ ரயிலின் 5ம் கட்ட விரிவாக்கத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. இதற்கு 12 ஆயிரம் கோடி செலவாகும்.


இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ ரயில் அமைப்பாக டில்லி மெட்ரோ உள்ளது. உலகின் மிகப்பெரிய மெட்ரோ ரயிலாகவும் உள்ளது. தற்போது 395 கி.மீ., தூரத்துக்கு செயல்படும் இந்த மெட்ரோ ரயில் வழித்தடத்தில் 289 ரயில் நிலையங்கள் உள்ளன. டில்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்திய பகுதிகளில் டில்லி மெட்ரோ செயல்பாடு உள்ளது.

இந்நிலையில், பிரதமர் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டில்லி மெட்ரோ ரயிலின் 5ம் கட்ட விரிவாக்க திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில்,

ஆர்கே ஆஸ்ரம் மார்க் முதல் இந்திர பிரஸ்தா(9.913 கி.மீ.,) வரையிலும்

2. ஏரோ சிட்டி முதல் விமான நிலை முனையம் 1 ( 2.263 கிமீ) வரையிலும்

3. துக்லாகாபாத் முதல் கலிந்தி கன்ஜ்( 3.9 கிமீ) வரையிலான 3 வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.

மொத்தம் 16.076 கிமீ தூரம் அமையும் இந்த திட்டமானது 12014.91 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தொகையானது மத்திய அரசு, டில்லி அரசு ஒதுக்கப்படுவதுடன் சர்வதே நிதி அமைப்புகள் உதவியும் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடங்களில் 13 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. அதில் 10 நிலையங்கள் அமைய உள்ளன.


இந்த மெட்ரோ திட்டத்தால், 60 ஆயிரம் அரசு ஊழியர்களும், 2 லட்சம் பயணிகளும் தினசரி பயன்பெறுவார்கள். இதனால், சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்படுவதுடன், புதைவடிவ எரிபொருள் பயன்பாடும் குறைக்கப்படும் எனமத்திய அரசு தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

நான்காம் கட்ட விரிவாக்கப்பணிகள் 111 கிமீ தூரத்துக்கு நடந்து வருகின்றன. அதில் 83 ரயில் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. 80.43 சதவீத பணிகள் முடிவடைந்துவிட்டன.

இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: டில்லியின் உள்கட்டமைப்புக்கு ஒரு பெரும் உத்வேகம் கிடைத்துள்ளது. டில்லி மெட்ரோவின் 5ம் கட்ட விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக மூன்று வழித்தடங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதனால் தலைநகரின் மெட்ரோ நெட்வொர்க் விரிவடைவதுடன், வாழ்வதற்கு எளிதான சூழல் மேம்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் குறையும். இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Advertisement