இதே நாளில் அன்று

டிசம்பர் 26:

துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில், ராமசாமி - இருளாயி தம்பதிக்கு மகனாக, 1925ல் இதே நாளில் பிறந்தவர் நல்லக்கண்ணு.

இவர், திருநெல்வேலி ஹிந்து கல்லுாரியில் படித்தபோது, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்றதால், கல்லுாரியில் இருந்து நீக்கப்பட்டார். 1943ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து, தலைமறைவாக வாழ்ந்து, 1949 டிசம்பர் 20ல் கைது செய்யப்பட்டார். சிறை காவலர்கள், இவரது மீசையை பொசுக்கி, முடியை பிய்த்து கொடுமைப்படுத்தினர்.

அன்றில் இருந்து மீசையை துறந்தவர், ஏழாண்டு சிறை வாழ்வில், புத்தகங்களின் பிரியரானார். தாழ்த்தப்பட்டவர்கள் கோவில் நுழைவு, பொது இடங்களில் செருப்பு அணிவது உள்ளிட்ட உரிமைகளுக்காக போராடினார். இவரது மாமனார், ஜாதி மோதலில் கொல்லப்பட்டதால், சமூக ஒற்றுமையை வலியுறுத்தினார்.

கடந்த, 1992 முதல் 2005ம் ஆண்டு வரை, இந்திய கம்யூ., கட்சியின் மாநில செயலராக இருந்தவர், தமிழக ஆறுகளில் நடக்கும் மணல் கொள்ளையை, தடுக்க பாடுபட்டார். இவரது ௮௦வது பிறந்தநாளுக்காக, கட்சி வழங்கிய, 1 கோடி ரூபாய் மற்றும் தமிழக அரசு வழங்கிய, 10 லட்சம் ரூபாயை, கட்சிக்கே திருப்பி அளித்தார்.

மாற்றுக்கட்சியினர் கூட குறை கூற முடியாத நல்லக்கண்ணுவுக்கு இன்று, 101வது பிறந்த நாள்!

Advertisement