மாவட்ட செயலர்களுக்கு எதிரான போராட்டம் தி.மு.க., மீது த.வெ.க., தலைமை சந்தேகம்

1

சென்னை: 'தங்கள் கட்சியின் மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டங்களை, தி.மு.க.,வினர் துாண்டி விடுகின்றனரோ' என, த.வெ.க., தலைமை சந்தேகிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

த.வெ.க.,வுக்கு தமிழகம் முழுதும் 120 மாவட்ட செயலர்களை, அக்கட்சி தலைவர் விஜய் நியமித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர், பொருளாதார வசதி இல்லாதவர்கள். இவர்கள், ஆளும்கட்சிக்கு விலைபோய் விடுவர் என, முதலில் கூறப்பட்டது. ஒருவரும் கட்சி மாறவில்லை.

ஆனால், இரு சக்கர வாகனங்களில் வலம் வந்த பலர், தற்போது சொகுசு கார்களுக்கு மாறியுள்ளனர். தங்களுக்கு பதவிக்காக பரிந்துரை செய்த, மாநில நிர்வாகி ஒருவருக்கு மாதந்தோறும் ஒரு தொகையை வழங்குகின்றனர். மேலும், சென்னைக்கு வரும்போது, சொகுசு ஓட்டல்களில் தங்கி, ஆடம்பரம் காட்டுகின்றனர்.

அவர்கள், ஆளும்கட்சி அமைச்சர்கள், மாவட்டச் செயலர்கள், எம்.எல்.ஏ.,களுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகவும், இதன் வாயிலாக வசதி வாய்ப்பு உருவானதாகவும் கூறப்படுகிறது. சிலர், பதவி பெற்றுத் தருவதாக கூறி, சொந்த கட்சியினரிடம் பல லட்சம் ரூபாயை வசூலித்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், த.வெ.க., மாவட்டச் செயலர்களுக்கு எதிராக, சொந்த கட்சியினரே, பல்வேறு மாவட்டங்களில், போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்கு வந்து, புகார் தெரிவிப்பதும் அதிகரித்துள்ளது.

இதன் பின்னனியில், ஆளும்கட்சி இருப்பதாக, த.வெ.க., தலைமை சந்தேகித்து வருகிறது. இது குறித்து, த.வெ.க., வட்டாரத்தில் கூறப்படுவதாவது:

தேர்தல் நேரத்தில், த.வெ.க., வேட்பாளர்கள், மாவட்டச் செயலர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை இழுக்க, தி.மு.க., தலைமை வியூகம் வகுத்துள்ளது. இதற்காக, சில மாவட்ட செயலர்களுடன், ஆளும் கட்சியினர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இது குறித்த தகவல், ஏற்கனவே கட்சி தலைவர் விஜய் கவனத்திற்கு வந்துள்ளது.

தற்போது, மாவட்டச் செயலர்களுக்கு எதிரான போராட்டத்தை துாண்டி, கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தும், முதல்கட்ட பணிகளை, தி.மு.க., தலைமை துவங்கி விட்டது. இதையறிந்த விஜய், சந்தேகத்திற்கிடமான மாவட்டச் செயலர்களை, அண்மையில், தேனாம்பேட்டையில் உள்ள கட்சியின் 'வார் ரூமிற்கு' அழைத்து, எச்சரித்து அனுப்பியுள்ளார்.

அடுத்தகட்டமாக ஆளும்கட்சியினருடன் தொடர்பில் உள்ள மாவட்டச் செயலர்களை பதவியில் இருந்து விடுவிக்கவும் திட்டமிட்டு உள்ளார்.

இவ்வாறு அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

@block_B@ மதுரையில் போலீசில் புகார் மதுரை வடக்கு மாவட்ட த.வெ.க., செயலர் கல்லாணைக்கு எதிராக அக்கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கல்லாணை ஆதரவாளர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். விசாலாட்சிபுரம் காலாங்கரை பகுதி த.வெ.க., நிர்வாகி சத்யா, தனக்கு பதவி வழங்க, கல்லாணை மறுப்பதாக குற்றம்சாட்டி வருகிறார். அவரது ஆதரவாளர்கள், கல்லாணைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கட்சித்தலைமையின் கவனத்திற்கு கல்லாணை கொண்டு சென்றார். அப்போது, சத்யா உள்ளிட்டோர் மீது போலீசில் புகார் செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதையடுதது, கல்லாணைக்கு ஆதரவாக, த.வெ.க., மகளிர் அணியினர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், 'சத்யா மீது மோசடி புகார் உள்ளது. இதை திசை திருப்ப, சிலரது பின்னணியில் கல்லாணை மீது, சத்யா அவதுாறு பரப்புகிறார். அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கூறியுள்ளனர்.block_B

@block_B@ தி.மு.க., இளைஞரணியினர் தாவல் தி.மு.க., இளைஞரணியில் மாவட்ட வாரியாக கிளை, வட்ட, பாக அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் பதவி அறிவிக்கப்பட்டு வருகிறது. மதுரையில் நிர்வாகிகள் பட்டியல் வெளியானதில், தி.மு.க., வட்டச் செயலர்களின் சிபாரிசு புறக்கணிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள், மாவட்ட நிர்வாகிகளுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டதால் வட்டச்செயலர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “இளைஞரணியில் நாங்கள் சிபாரிசு செய்தவர்களுக்கு பொறுப்புகள் அளிக்கவில்லை. மாநகராட்சி பகுதியில் கவுன்சிலர்கள் கை ஓங்குகிறது. இதனால் வட்ட செயலர்கள் சிபாரிசு செய்த இளைஞர்கள் பல, த.வெ.க.,வுக்கு மாறி வருகின்றனர். அ.தி.மு.க., சென்றால் பதவியை எதிர்பார்க்க முடியாது என்பதால் த.வெ.க., பக்கம் 'ரூட்'டை மாற்றுகின்றனர். தி.மு.க., தலைமை இவ்விஷயத்தில் முடிவு எடுத்து, இளைஞர்களை கட்சிக்குள் தக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.block_B

Advertisement