வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா இறுதிச் சடங்கு; நாளை டாக்கா செல்கிறார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

6


புதுடில்லி: வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில், நாளை (டிசம்பர் 31) மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார்.


வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, 80, இதயம் மற்றும் நுரையீரல் தொற்று நோய் காரணமாக இன்று காலமானார்.
இவரின் மறைவுக்கு உலக நாடுகளின் பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


இவர் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமர் என்பதால், டாக்காவில் நாளை (டிசம்பர் 31) நடக்கும் இறுதிச் சடங்கில் பல்வேறு உலக நாட்டு தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். அடுத்து 3 நாட்கள் அரசு துக்க அனுசரிக்கப்படும் என்று வங்கதேச இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.


இந்தியா சார்பில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும் வங்கதேச தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியாவின் இறுதிச் சடங்கில் இந்திய அரசு மற்றும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாளை (டிசம்பர் 31) டாக்காவுக்குச் செல்வார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement