அரசு ஊழியர்களின் உணர்வுகளை துாண்டி போராட்டத்திற்கு இழுக்கும் இடைத்தரகர்கள்: அமைச்சர் சுப்பிரமணியன் புது தகவல்

4

சென்னை: ''தேர்தல் நெருங்குவதால், பணியாளர்களின் உணர்வுகளை துாண்டி போராட்டத்திற்கு இழுக்கும் இடைத்தரகர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

அமைச்சர் அளித்த பேட்டி:

இடைநிலை சுகாதார செவிலியர்கள், மக்களை தேடி மருத்துவ திட்டத்திற்காக, நான்கு ஆண்டுகளுக்கு முன் பணிக்கு எடுக்கப்பட்டனர். அவர்களுக்கு, 11 மாதத்திற்கான பணி ஆணை தான் வழங்கப்பட்டது. இவர்களுக்கான ஊதியம், மத்திய அரசு, 60 சதவீதம், மாநில அரசு, 40 சதவீதம் அடிப்படையில், 18,000 ரூபாய் வழங்கப்படுகிறது.

சென்னைக்கு வந்தால் பணி நிரந்தரம் செய்து தருகிறோம் என, யாரோ ஒரு இடைத்தரகர் தவறாக வழிகாட்டி, அழைத்து வந்துள்ளார். அவ்வாறு பேராட்டத்தில் ஈடுபட்டோரிடம், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண் தம்புராஜ் பேசி ஆலோசனை வழங்கினார்.

தேர்தல் நெருங்குகிறது என்பதால், பணியாளர்களின் உணர்வுகளை துாண்டி விட்டு, போராட்டத்திற்கு வித்திடும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட பணியாளர்கள் உஷாராக இருக்க வேண்டும்.

தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற்றப்பட்டுள்ளது. பான்பராக் போன்ற பொருட்கள், தமிழகத்தில் மட்டும் தான் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சி தலைவர்கள், எங்கு விற்கிறது என்பதை கூறினால், கூறியவர்களின் பெயர்களை ரகசியமாக பாதுகாத்து நடவடிக்கை எடுப்போம்.

அரசு எடுத்த நடவடிக்கைகளை மறைத்து விட்டு, இந்த ஆட்சியில் போதைப் பொருட்களால் குற்றம் அதிகரித்திருப்பதாக கூறுவது, உண்மை இல்லாத ஒன்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement