கோப்பை வென்றது இந்திய அணி * ஐந்தாவது போட்டியிலும் வெற்றி

திருவனந்தபுரம்: ஐந்தாவது 'டி-20' போட்டியில் இந்திய பெண்கள் அணி, 15 ரன் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. தொடரை 5-0 என முழுமையாக வென்று, கோப்பை கைப்பற்றியது.
இந்தியா வந்த இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டியிலும் இந்தியா வென்றது. ஐந்தாவது போட்டி நேற்று, திருவனந்தபுரம், கிரீன்பீல்டு மைதானத்தில் நடந்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக 'டாஸ்' வென்ற இலங்கை பெண்கள் அணி கேப்டன் சமாரி, மீண்டும் பீல்டிங் தேர்வு செய்தார்.
நேற்று துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, ரேணுகாவுக்கு ஓய்வு தரப்பட்டது. ஸ்னே ராணா அணிக்கு திரும்பினார்.
ஷைபாலி ஏமாற்றம்
இந்திய அணிக்கு ஷைபாலி, கமலினி ஜோடி துவக்கம் கொடுத்தது. கடந்த 3 போட்டியில் 'ஹாட்ரிக்' அரைசதம் அடித்த ஷைபாலி, இம்முறை 5 ரன்னில் அவுட்டானார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கமலினி 12 ரன் மட்டும் எடுத்து அவுட்டானார். ஹர்லீன் 13 ரன் மட்டும் எடுத்து திரும்பினார்.
அடுத்து வந்த ரிச்சா கோஷ் (5), தீப்தி சர்மா (7) என இருவரும் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். இந்திய அணி 10.4 ஓவரில் 77/5 ரன் என திணறியது.
ஹர்மன்பிரீத் நம்பிக்கை
அடுத்து கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், அமன்ஜோத் கவுர் இணைந்தனர். இருவரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி சரிவில் இருந்து மீண்டது. சமாரி ஓவரில் (15) அடுத்தடுத்து இரு பவுண்டரி அடித்த ஹர்மன்பிரீத் கவுர், 35 பந்தில் சதம் எட்டினார்.
தொடர்ந்து இனோகோ வீசிய 16வது ஓவரில் தலா ஒரு சிக்சர், பவுண்டரி என விளாசினார் ஹர்மன்பிரீத் கவுர். ராஷ்மிகா பந்தில் சிக்சர் அடித்த அமன்ஜோத் கவுர், 21 ரன்னில் அவுட்டானார். 43 பந்தில் 68 ரன் எடுத்த ஹர்மன்பிரீத் கவுர், கவிஷா பந்தில் வீழ்ந்தார். போட்டியின் 20 வது ஓவரை மாதரா வீசினார். இதில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி உட்பட 20 ரன் விளாசினார் அருந்ததி. இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ரன் எடுத்தது. அருந்ததி (27), ஸ்னே ராணா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஹாசினி ஆறுதல்
அடுத்து களமிறங்கிய இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி (2) ஹாசினி ஜோடி சுமார் துவக்கம் தந்தது. அரைசதம் அடித்த இமேஷா (50), அமன்ஜோத் பந்தில் வீழ்ந்தார். நிலாக்சிகா (3), கவிஷா (5) நிலைக்கவில்லை. 42 பந்தில் 65 ரன் எடுத்த ஹாசினி, ஸ்ரீசரணி பந்தில் போல்டானார். ஹர்ஷித்தா (8), கவுஷினி (1) கைவிட, இலங்கை அணி 20 ஓவரில் 160/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

கமலினி அறிமுகம்
இந்திய அணி விக்கெட் கீப்பர், துவக்க வீராங்கனை கமலினி 17. சர்வதேச 'டி-20'ல் நேற்று அறிமுக வாய்ப்பு பெற்றார். இந்தியாவின் 90 வது 'டி-20' வீராங்கனையான இவருக்கு, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்பெஷல் நீல நிற தொப்பி வழங்கினார்.

மூன்றாவது இடம்
சர்வதேச 'டி-20'ல் அதிக அரைசதம் அடித்த இந்திய வீராங்கனைகளில் ஹர்மன்பிரீத் கவுர் (14), ஜெமிமா (14), ஷைபாலியை (14) முந்தி, மூன்றாவது இடம் பிடித்தார். முதல் இரு இடத்தில் ஸ்மிருதி (32), மிதாலி ராஜ் (17) உள்ளனர்.

Advertisement