புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகும் தலைநகரம்; சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் மூடல்

சென்னை: புத்தாண்டை விபத்தில்லாமல் கொண்டாடும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுகின்றன.



ஆங்கில புத்தாண்டை வரவேற்க அனைத்து தரப்பினரும் தயாராகி வருகின்றனர். பிடித்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் வாழ்த்துகளை விரும்பியவர்கள் அனுப்பி வருகின்றனர்.


சென்னை மட்டுமல்லாது திருச்சி, மதுரை, கோவை, நெல்லை என அனைத்து நகரங்களிலும் கொண்டாட்டங்கள் தொடங்கி உள்ளன. ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தை விபத்தில்லாத கொண்டாட்டமாக கொண்டாட தமிழக காவல்துறை பல்வேறு முக்கிய முன் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆரம்பித்து உள்ளது.


அதன் ஒரு கட்டமாக சென்னையில் உள்ள அனைத்து மேம்பாலங்களும் மூடப்படுவதாக பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. புத்தாண்டை விபத்தில்லாமல் கொண்டாட சென்னையின் அனைத்து மேம்பாலங்களும் இன்று (டிச.31) இரவு 10 மணி முதல் நாளை (ஜன.1) காலை 6 மணி வரை மூடப்படும் என்று அறிவித்துள்ளது


மேலும், மது அருந்திவிட்டு அதிவேகத்தில் மக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் வாகனங்கள் ஓட்டுவோரை பிடிக்க மாநகரம் முழுவதும் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளதாக காவல்துறை கூறி உள்ளது.

Advertisement