ஆயிரம் சந்தேகங்கள் : டீமேட் கணக்குக்கு சேவை கட்டணம் இருக்கிறதா?

5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்று மத்திய அரசு லட்சியக் கனவாக சொல்கிறதே! இது குறித்து விளக்க முடியுமா?


- அ. யாழினி பர்வதம் சென்னை


5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது, நம் நாட்டில் ஓராண்டில் உற்பத்தியாகும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பு 5 லட்சம் கோடி டாலரை (தோராயமாக 420 லட்சம் கோடி ரூபாய்) எட்ட வேண்டும் என்ற இலக்காகும்.
சமீபத்திய தரவுகளின்படி இந்தியா 4.18 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டை எட்டி, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இப்போது உருவெடுத்துள்ளது.

இதற்கு முக்கியமான காரணம், நம் பொருளாதாரம் தற்போது 'கோல்டிலாக்ஸ்' எனப்படும் அதிக வளர்ச்சி (8.2%) மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட மிகச் சரியான நிலையில் இருப்பதேயாகும்.

இதே வேகம் தொடர்ந்தால், அடுத்த சில ஆண்டுகளில் நாம் ஜெர்மனியையும் முந்தி, 5 டிரில்லியன் இலக்கை அடைந்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக மாறுவோம்.

ஒரு சிறிய கடை, பெரிய ஷாப்பிங் மாலாக மாறுவதைப் போன்ற இந்த வளர்ச்சியால், நம் நாட்டில் உலக முதலீடுகள் குவியும்; புதிய தொழிற்சாலைகள் உருவாகும். நம் இளைஞர்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகள் கிடைத்து, தனிநபர் வருமானமும் வாழ்க்கைத் தரமும் உயரும்.

டீமேட் கணக்கை துவங்கி, நாம் ஒன்றுமே செய்யவில்லை என்றால், குறைந்தபட்சம் எவ்வளவு சேவை கட்டணமாக விதிக்கப்படும்?


செ.செல்வக்கோ பெருமாள் காஞ்சிபுரம்


நீங்கள் டீமேட் கணக்கை மட்டும் துவங்கிவிட்டு, அதில் பங்குகள் எதுவும் வாங்கிப் போடவில்லை என்றால், உங்களுக்கு ஆண்டுப் பராமரிப்புக் கட்டணம் எதுவும் விதிக்கப்படக் கூடாது.
பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளரான 'செபி' சிறு முதலீட்டாளர்களுக்காக 'பேசிக் சர்வீசஸ் டீமேட் அக்கவுன்ட்' எனும் 'பி.எஸ்.டி.ஏ' என்ற வழிமுறையைக் கொண்டு வந்துள்ளது.

இதன்படி, உங்கள் கணக்கில் உள்ள பங்குகளின் மதிப்பு 4 லட்சம் ரூபாய் வரை இருந்தால், ஆண்டுக் கட்டணம் பூஜ்ஜியம். 4 லட்சத்திற்கு மேல், 10 லட்சம் வரை இருந்தால், கட்டணம் 100 ரூபாய் மட்டுமே.

இருப்பினும், நீங்கள் டீமேட் கணக்குத் துவங்கும்போது சாதாரணத் திட்டத்தில் கையெழுத்திட்டிருந்தால், ஆண்டுக்கு 300 முதல் 900 ரூபாய் வரை ஆண்டு பராமரிப்புக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அந்த டீமேட் கணக்கு உங்களுக்குத் தேவையில்லை என்றால், உடனடியாக ஒரு 'குளோஷர் பார்ம்' கொடுத்து அதை மூடிவிடுவது நல்லது. இல்லையெனில், பிற்காலத்தில் நிலுவைத் தொகைக்காக நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது.

என்னுடைய அப்பாவுக்கு 1990ல் வெறும் 3,500 ரூபாய் தான் சம்பளம்; அரசு ஊழியர். ஆனால், அவரால் அன்றைக்கு வீடு வாங்க முடிந்தது. இன்று நான் அவரைவிடப் பன்மடங்கு சம்பளம் வாங்கினாலும், என்னால் ஒரு அடுக்கக பிளாட்டைக் கூட வாங்க முடியவில்லை. இதை எப்படிப் புரிந்துகொள்வது என்றே தெரியவில்லை.


பவதாரிணி அருணாசலம் கோவை



சொத்துக்களின் மதிப்பு உயர்ந்த வேகத்துக்கு சம்பள விகிதம் உயரவில்லை என்பது தான் உண்மையான காரணம்.
உதாரணமாக, உங்கள் தந்தை 1990ல் 3,500 சம்பளம் வாங்கும்போது, ஒரு வீட்டின் விலை தோராயமாக 1.5 லட்சமாக இருந்திருக்கும். அதாவது, அவரது 42 மாதச் சம்பளத்தைச் சேர்த்து வைத்தால், அந்த வீட்டை வாங்கியிருக்க முடியும்.

இன்றைக்கு பல்வேறு ஊதியக் குழு பரிந்துரைகளை ஒட்டி, சம்பள உயர்வு ஏற்பட்டிருப்பதால், அவருக்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைக்கும். ஆனால், இன்று ஒரு அடுக்ககத்தின் விலை குறைந்தது 80 லட்சம்.

இந்த அடுக்ககத்தை வாங்க அவருக்கு 80 மாத சம்பளத்தைச் சேர்த்து வைத்தால் தான் முடியும்.

சுருக்கமாகச் சொன்னால், கடந்த 35 ஆண்டுகளில், சம்பளம் 30 மடங்கு உயர்ந்திருக்கிறது. ஆனால், சொத்தின் மதிப்போ 100 மடங்குக்கும் மேல் உயர்ந்திருக்கிறது.

Tamil News

பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டுகள், தங்கம் போன்றவை தான் எதிர்கால செல்வ வளத்துக்கு உதவிகரமாக இருக்குமா? வேறு எதுவும் இல்லையா?


எஸ்.தீபேஷ், திருவள்ளூர்


செல்வ வளம் பெருகுவதற்கு இவற்றை விட இன்னும் அடிப்படையான மூன்று சூட்சுமங்கள் உள்ளன. ஒன்று சம்பளம்.
ஒருவர் தன் வேலையில் திறமையை வளர்த்துக்கொண்டு, கூடுதல் சம்பளத்தோடு வாழ்க்கையைத் துவங்குவது மிகப்பெரிய வரம்.

உதாரணமாக, நீங்கள் கூடுதலாகச் சம்பாதிக்கும் ஒவ்வொரு 10,000 ரூபாயையும் முதலீடு செய்து வந்தால், 30 ஆண்டுகளின் முடிவில் அது 3.5 கோடி ரூபாயாகப் பெருகியிருக்கும். ஆரம்ப சம்பளம் எவ்வளவு முக்கியம் பார்த்தீர்களா!

இரண்டாவது வழிமுறை, சேமிப்பு விகிதம். 50,000 ரூபாய் சம்பளத்தில் 10 சதவீதம் சேமிப்பதற்கும் 30 சதவீதம் சேமிப்பதற்கும் இடையில், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தை ஏற்படுத்திவிடும்.

இந்தப் பணத்தை மியூச்சுவல் பண்டுகளில் 30 ஆண்டுகள் போட்டு வந்தால், 10 சதவீதம் சேமித்தவர் 1.8 கோடி ரூபாய் பெறுவார். 30 சதவீதம் சேமித்தவரோ 5.3 கோடி ரூபாய் பெறுவார்.

மூன்றாவது அம்சம், நீங்கள் எவ்வளவு சீக்கிரம் முதலீட்டைத் துவங்குகிறீர்கள் என்பது. மாதம் 25,000 ரூபாயை ஒருவர் சேமிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். 25 ஆண்டுகள் சேமித்தால் அவருக்குக் கிடைப்பது 4.7 கோடி.

அதுவே 30 ஆண்டுகள் சேமித்தால் கிடைப்பதோ 8.8 கோடி. வெறும் 5 ஆண்டுகள் தாமதமானால், இழப்பு ஏறக்குறைய 4 கோடி ரூபாய்!


இந்தக் கோணத்தில் பார்த்தால், பங்குச் சந்தை, மியூச்சுவல் பண்டு, தங்கம் போன்றவை வளர்வதற்கான கருவிகள். உண்மையான வளர்ச்சி மேலே சொல்லப்பட்டுள்ள அம்சங்களிலேயே இருக்கிறது.



வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.


ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.


ஆர்.வெங்கடேஷ்


pattamvenkatesh@gmail.com ph:98410 53881

Advertisement