வெனிசுலா எண்ணெய் அரசியல் தங்கத்தின் விலையை பாதிக்குமா?

தென் அமெரிக்க நாடான வெனிசுலா மீது தாக்குதல் நடத்திய அமெரிக்க படைகள், அந்நாட்டின் அதிபர் மதுரோவை சிறை பிடித்துள்ளன. இதன் காரணமாக, புவிசார் அரசியல் பதற்றம் மீண்டும் தொற்றியுள்ள சூழலில், தங்கத்தின் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


இது குறித்து, 'ஐகுளோபல் ஆல்டர்நேட்' நிறுவனர் சி.கே.சிவராம் தெரிவித்ததாவது:


உலக அரசியலில் நடக்கும் பல மோதல்களின் பின்னணியில், பெரும்பாலும் ஒரு பொதுவான காரணமாக இருக்கிறது எண்ணெய். அமெரிக்கா மற்றும் வெனிசுலா இடையிலான பதற்றமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.


வெளிப்படையாக அரசி யல் கருத்து வேறுபாடுகள் பேசப்பட்டாலும், உண்மை யில் இந்த மோதலின் அடிப்படை காரணம் எண்ணெய் வளமே. வெனிசுலா உலகிலேயே மிகப்பெரிய எண்ணெய் களஞ்சியத்தை கொண்ட நாடு. ஆனாலும் இன்று அது எண்ணெய் வளம் குறைந்த நாடு போலவே செயல்படுகிறது.



காரணம், எண்ணெய் உற்பத்தி சரிவடைந்தது; சுத்திகரிப்பு வசதி பழுதடைந்தது. மேலும், சர்வதேச தடைகள் காரணமாக நாட்டுக்கு வரும் வருமானம் குறைந்தது. வெனிசுலாவின் எண்ணெய் சாதாரணமானது அல்ல. அது மிகவும் கனமான கச்சா எண்ணெய். இதை சுத்திகரிக்க சிறப்பு தொழிற்சாலைகள் தேவை.


இத்தகைய தொழிற்சாலை கள் பலவும் அமெரிக்காவில் அமைந்துள்ளதால், ஒரு காலத்தில் வெனிசுலா - அமெரிக்கா உறவு நெருக்கமாக இருந்தது. ஆனால், அரசின் தலையீடு, தேசியமயமாக்கல், முதலீடு குறைவு போன்ற காரணங்களால் அந்த உறவு முறிந்தது.


சர்வதேச தடைகள், வெனிசுலாவின் எண்ணெய் ஏற்றுமதியை முழுதுமாக நிறுத்தவில்லை. ஆனால், எண்ணெய் செல்லும் பாதையை மாற்றிவிட்டன. இப்போது, அந்த எண்ணெய் தள்ளுபடி விலை யில், மறைமுக வழிகளில், பெரும்பாலும் ஆசிய நாடுகளுக்கு செல்கிறது. இதனால், நாட்டுக்கு கிடைக்கும் வருமானம் குறைந்து, இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகரித்து உள்ளது.


இந்த சூழலில் தான் தங்கம் முக்கியத்துவம் பெறுகிறது. எண்ணெய் போல தங்கம் எந்த ஒரு நாட்டின் கட்டுப்பாட்டிலும் இல்லை. அரசியல் தடைகள், போர்கள், பொருளாதார அதிர்வுகள் வந்தாலும், தங்கம் தன் மதிப்பை பெரும்பாலும் காப்பாற்றுகிறது. அதனால் தான், உலகின் பல மத்திய வங்கிகள், தங்க கையிருப்பை அதிகரித்து வருகின்றன.


எண்ணெய் அரசியலாக்கப்படும், வழி மாற்றப்படும் உலகில், தங்கம் எல்லைகளை தாண்டி மதிப்பை பாதுகாக்கும் சொத்தாக விளங்குகிறது. அதனால், உறுதியற்ற உலக சூழலில் தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடு என்ற கருத்து மேலும் வலுப்பெறுகிறது.

Advertisement