சென்னை ஏர்போர்ட்டில் முதியவர் திடீர் இறப்பு

சென்னை: மலேஷியாவில் உள்ள மகனை பார்த்துவிட்டு, சென்னைக்கு திரும்பிய முதியவர், விமான நிலையத்தில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சென்னை, போரூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 72. இவர், மலேஷியா தலைநகர் கோலாலம்பூரில் வசிக்கும் தன் மகனை பார்க்க, மனைவியுடன் கடந்த மாதம் சென்றார்.

அங்கிருந்து சென்னைக்கு திரும்ப முடிவு செய்தார். அதன்படி, கோலாலம்பூரில் இருந்து நேற்று காலை 10:50 மணிக்கு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.

குடியுரிமை மற்றும் சுங்க சோதனையை முடித்து, சர்வதேச வருகை முனையத்தில் இருந்து நடந்து வெளியேறும்போது, முத்துகிருஷ்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, மயங்கி விழுந்தார்.

அங்கிருந்த பயணியர் மற்றும் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உடனடியாக விமான நிலைய மருத்துவ குழுவுக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த 'காவேரி' மருத்துவமனை மருத்துவர்கள், முதியவருக்கு சி.பி.ஆர்., சிகிச்சை அளித்து முதலுதவி செய்தனர். நீண்ட நேரம் போராடியும், அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரது உடல், விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில், கடந்த இரு மாதங்களில், உள்நாடு, வெளிநாடு என ஆறு பயணியர் இறந்த நிலையில் இம்மாதம் மேலும் ஒரு பயணி உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement