ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்பு மனு தாக்கல்

புதுச்சேரி :ஆண்டுக்கு ரூ.10 கோடி எனது சொந்த செலவில், புதுச்சேரியின் அடிப்படை நகர கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை சரிசெய்வேன் என, லட்சிய ஜனநாய கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உறுதி அளித்தார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில், காமராஜ் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் மார்ச்23 ல் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் நேற்று வீராம்பட்டினம் செங்கழுநீரம்மன் கோவிலுக்கு சென்ற ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது வேட்பு மனுவுக்கு பூஜை செய்து, சாமி தரிசனம் செய்தார்.

அப்போது அவரது மாமனார் கமலக்கண்ணன் பங்கேற்று, பூஜை செய்யப்பட்ட மாலையை ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு அணிவித்து, வெற்றி உறுதி என, நம்பிக்கை தெரிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், பூஜை செய்யப்பட்ட லட்சிய ஜனநாயக கட்சியின் தேர்தல் சின்னமான 'தர்பூசணி'யை மாமனார் கமலக்கண்ணன், பொதுச்செயலாளர்கள் துரைசாமி, சுரேஷ் மற்றும் மீனவர் அணி தலைவர் குமரன் ஆகியோரிடம் பெற்றுக்கொண்டார்.

இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது குறித்து லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கூறுகையில், 'தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெற நாங்கள் எங்கள் பணிகளை தொடங்கியிருக்கிறோம். நாங்கள் புதுச்சேரியை 2050-க்குள் சிறந்த முன்மாதிரி நகரமாக மாற்ற ஆசைப்படுகிறோம்.

இந்த கூட்டணிக்குத் தலைமை தாங்கும் முதல்வர் ரங்கசாமி வழிகாட்டுதலில் மாபெரும் வெற்றியை பெறுவோம். ஒரு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.10 கோடி வீதம் எனது சொந்த செலவில், புதுச்சேரியின் அடிப்படை நகர கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை சரிசெய்வேன். புதுச்சேரியை உலகில் முன்மாதிரி நகரமாக மாற்றுவதே எனது ஒரே நோக்கம்' என்றார்.

Advertisement