அ.தி.மு.க., கூட்டணியினர் செஞ்சியில் சாலை மறியல்

செஞ்சி: செஞ்சியில் தி.மு.க., பிளக்ஸ் பேனர்களை அகற்றாததை கண்டித்து, அ.தி.மு.க., வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்த பிறகு அனைத்து இடங்களிலும் அரசியல் கட்சிகளின் பேனர்கள் அகற்றி வருகின்றனர். செஞ்சியில் தி.மு.க. வினர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வைத்திருந்த பேனர்களை நேற்று வரை போலீசார் அகற்றவில்லை என தெரிகிறது.

இதைக் கண்டித்து நேற்று இரவு 10:00 மணியளவில் அ.தி.மு.க., நகர செயலாளர் சுந்தர்ராஜன் தலைமையில் பா.ம.க., பா.ஜ., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் செஞ்சி கூட்ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த செஞ்சி போலீசார் பேனர்களை அகற்றுவதாக உறுதியளித்தனர். அதை ஏற்காத அ.தி.மு.க, வினர் பேனர்களை அகற்றினால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் பேனர்களை உடனடியாக அகற்றினர். அதையடுத்து, இரவு 10:20 மணியளவில் அ.தி.மு.க., வினர் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர். இதனால் செஞ்சியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement