கள் இறக்கியவர்கள் கைது எதிர்த்த 55 பேர் மீது வழக்கு

திருச்சி: சமயபுரம் அருகே, சட்ட விரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தவர்களை கைது செய்ததை கண்டித்து, முற்றுகை போராட்டம் நடத்தியவர்கள் மீதும் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.


திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே, சக்தி நகர் பகுதியில் சமயபுரம் போலீசார் ரோந்து சென்ற போது, துரைசாமி, 59, சின்னையன், 57, கணேசன், 44 மற்றும் ஒரு பெண் ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள், சட்டவிரோதமாக பனை மரங்களில் இருந்து கள் இறக்கி விற்பனை செய்தது தெரிய வந்தது. பெண்ணை தவிர மூன்று பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த ஐந்து லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.


சட்டவிரோதமாக கள் இறக்கி விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பனையேறிகள் பாதுகாப்பு இயக்க நிர்வாகி மணி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் சமயபுரம் போலீஸ் ஸ்டேஷன் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்களில் 55 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement