சாலை ஓரத்தில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் விபத்து அபாயம்
செய்யூர்:சத்தியமங்கலம் அருகே மதுராந்தகம்-கூவத்துார் நெடுஞ்சாலை ஓரத்தில் தாழ்ந்து செல்லும் மின்கம்பிகள் மீது கனரக வாகனங்கள் உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
பவுஞ்சூர் அடுத்த சத்தியமங்கலம் பகுதியில் மதுராந்தகம்-கூவத்துார் மாநில நெடுஞ்சாலை உள்ளது.
சாலையில் இருசக்கர வாகனம், கார்,லாரி, பேருந்து என நுாற்றுக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
சத்தியமங்கலம் வயல்வெளிப் பகுதியில் பவுஞ்சூரில் இருந்து கூவத்துார் நோக்கி செல்லும் சாலை மார்கத்தில் சாலை அருகே குடியிருப்புகள் மற்றும் வயல்வெளியில் உள்ள மின்மோட்டார்களுக்கு மின்விநியோகம் செய்ய அமைக்கப்பட்டுள்ள உயர் அழுத்த மின்கம்பிகள் தாழ்வாக செல்வதால், சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் மின்கம்பிகள் மீது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆகையால் மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படுவதற்கு முன் தாழ்ந்து செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.