யார் ஏமாளி?

ஆர்.ராமநாதன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார், தி.மு.க., முதல்வர் ஸ்டாலின்.

அதில், தனக்கு சொந்தமாக காரோ, இருசக்கர வாகனமோ கிடையாதென்றும், கையில் ரொக்கமாக வெறும், 10,000 ரூபாய் தான் உள்ளதென்றும் ஓர் உருட்டு உருட்டியுள்ளார்.

நல்ல வேளை... இரண்டு கரை வேட்டிகளும், இரண்டு அரைக்கை சட்டைகளும் தான் உள்ளன என்று குறிப்பிடவில்லை.

இவருடன் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற நகராட்சி துறை அமைச்சர் நேரு தான், தெருவோர டீ கடையில், ஸ்டாலின் குடித்த சாயாவுக்குக் கூட காசு கொடுத்தார்.

அந்த அளவுக்கு, காமராஜர் மற்றும் கக்கனை காட்டிலும் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

சட்டசபை உறுப்பினருக்கே மாத சம்பளம் ஒன்றரை லட்சம் ரூபாய் முதல் இரண்டு லட்சம் ரூபாய் வரும். முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு இன்னும் கூடுதலாக கிடைக்கும். இதுதவிர படிகள் தனி!

இப்படி லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் ஒருவர், தன் கையிருப்பு வெறும், 10,000 ரூபாய் தான் என்று வேட்புமனுவில் எழுதி கொடுத்திருக்கிறார் என்றால், அவர் யாரை முட்டாளாக்க நினைக்கிறார்?

தேர்தல் கமிஷனையா, ஓட்டு போடும் மக்களையா?

ஒரு வேட்புமனுவை முழுதாக பரிசீலனை செய்ய கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல், அதில் உள்ள தகவலை கண்ணை மூடிக் கொண்டு நம்பும் தேர்தல் கமிஷன் ஏமாளியா, அரசியல்வாதிகள் உருட்டும் உருட்டுகளை உண்மை என்று நம்பி ஓட்டு போடபோகும் வாக்காளர்கள் ஏமாளிகளா?

யார் ஏமாளி?




ஜாதி கட்சியான தே.மு.தி.க.,! கு.அருணாச்சலம், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

தி.மு.க.,வின் குடும்ப அரசியலையும், ஊழலையும் எதிர்த்து, தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தவர், நடிகர் விஜயகாந்த்.

கடந்த 2006ல் தமிழகம் முழுதும் 234 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தி, 8.38 சதவீத ஓட்டுகளை பெற்று, இரு திராவிடக் கட்சிகளும் தனி மெஜாரிட்டியில் வெற்றி பெறுவதை தடுத்தார்.

அதேபோன்று, 2009 பார்லிமென்ட் தேர்தலிலும், தனித்துப் போட்டியிட்டு, 10 சதவீத ஓட்டுகளை பெற்று, பல தொகுதிகளில் இரு திராவிடக் கட்சிகளின் வெற்றி வாய்ப்பில் மிகப்பெரிய சேதாரத்தை உண்டு செய்தார்.

அதனால் தான், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2011 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க.,வை கூட்டணியில் இணைத்து, தேர்தலில் வெற்றி பெற்றார்.

அரசியல் சாணக்கியத்தனம் இல்லாத விஜயகாந்த், தனக்கு கிடைத்த எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தை பயன்படுத்தி கட்சியை வளர்க்காமல், ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட மோதலில், தவறான சில முடிவுகளை எடுத்தார்.

விளைவு... அவரது எம்.எல்.ஏ.,க்கள் பலர் அ.தி.மு.க.,வில் இணைந்தனர்.

அதன்பின், அவரது மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் என இருவரின் சுயநலம் மற்றும் விஜயகாந்தின் உடல் நலக் குறைவு என்று, அவரது அரசியல் நடவடிக்கைகள் வலு இழந்தது.

அதன்பின், அவர் மனைவி பிரேமலதா ஒவ்வொரு தேர்தலிலும் குதிரை பேர அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

அதன் உச்சமாகத்தான், தற்போது தி.மு.க., கூட்டணியில் இணைந்து, தன் தம்பி சுதீஷ்க்கு ராஜ்ய சபா சீட்டு மற்றும் 10 எம்.எல்.ஏ., சீட்டுகள் பெற்றுள்ளார்.

விஜயகாந்ந் உடல் ஆரோக்கியத்துடன் இருந்த வரை, பிரேமலதா, சுதீஷ் இருவரையும் கட்சி விஷயங்களில் தலையிட அனுமதித்ததில்லை.

அவர் உடல் நலம் குன்றிய பின்தான் இந்த இருவரின் ஆதிக்கம் கட்சியில் தலை துாக்க ஆரம்பித்தது.

எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதாவிற்கு அனைத்து மதத்தினரும் ஓட்டுப் போட்டது போல், விஜயகாந்த்திற்கும் ஜாதி, மதம் கடந்து ஓட்டுப் போட்டனர்; அவரும் ஜாதி அரசியல் செய்யவில்லை.

ஆனால், பிரேமலதாவோ, தன் சகோதரருக்கு ராஜ்யசபா சீட்டு வாங்கி கொடுத்ததுடன், தி.மு.க., கொடுத்த 10 சீட்டுகளில் அவரும், அவரது மகன் விஜய பிரபாகரன் உட்பட ஆறு பேருக்கு, தான் சார்ந்த நாயுடு வேட்பாளர்களுக்கு வழங்கி, தே.மு.தி.க.,வை, 'நாயுடு கட்சி'யாக மாற்றி விட்டார்.

தி.மு.க.,வின் குடும்ப அரசியலுக்கும், ஊழலுக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்ட கட்சி, இன்று மனைவி, மகன், மைத்துனர் என்று ஒரு குடும்ப அரசியலிலும், ஜாதி கட்சி அடையாளத்துக்குள்ளும் விழுந்து, தி.மு.க.,விற்குள் சங்கமித்து விட்டது.

பேராசை கொண்டவர்களுக்கு கொள்ளையும் இல்லை; கோட்பாடும் இல்லை!

***

தேர்தல் கால சலுகை! கே.தங்கமுத்து, பொள்ளாச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களும், பணியிலிருக்கும் அரசு ஊழியர்களும் தொடர் போராட்டம் நடத்தியதன் விளைவாக, தற்போது, தமிழக அரசு ஓய்வூதிய தொகையை உயர்த்தியுள்ளது.

அதுவும், ஆட்சி முடியும் தறுவாயில், சட்டசபை தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் உயர்த்தியுள்ளதை பார்க்கும் போது, இது நிரந்தரமாக கிடைக்குமா அல்லது தேர்தலுக்கு பின், மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் நிறுத்தப்படுமா என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.

ஏனெனில், தமிழகம் முழுதும் துாய்மைப் பணியாளர்களும், மாற்றுத்திறனாளிகளும் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளபடி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல போராட்டங்களை நடத்தியும், கைது செய்யப்பட்டனரே தவிர, அவர்களுக்கு இன்றுவரை எந்த விடிவும் ஏற்படவில்லை.

மருத்துவர்களும், செவிலியர்களும், தற்காலிக ஊழியர்களும் மாதக்கணக்கில் போராட்டம் நடத்தியும் பலன் இல்லை.

அப்படி இருக்கும் போது, அரசு ஊழியர்களின் கோரிக்கைக்கு மட்டும் தி.மு.க., அரசு செவி சாய்த்துள்ளது என்றால், அரசு ஊழியர்களின் ஓட்டுகள் மட்டும் போதுமா?

மற்றவர்கள் இந்த ஆட்சிக்கு ஓட்டளிக்க வேண்டாமா?

ஏற்கனவே 2021 தேர்தலுக்கு கொடுத்த, 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில், தற்போது 2026 தேர்தலுக்காக கொடுத்துள்ள வாக்குறுதிகளை நம்பி மக்கள் எப்படி ஓட்டு போடுவர்?

அரசு ஊழியர்களை சமாதானப்படுத்தினால் போதும்; அவர்கள் எப்படியேனும் தேர்தலில் தில்லு முல்லு செய்து மீண்டும் தன்னை ஆட்சியில் அமர்த்தி விடுவார் என எண்ணி,

அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த தேர்தல் கால சலுகை, தி.மு.க.,வை அரியணையில் மீண்டும் ஏற்றி விடுமா என்ன?





Advertisement