வெளிநாட்டு 'டூர்' ஆசை காட்டிய முஸ்லிம் லீக் நிர்வாகி மீது வழக்கு

மலப்புரம்: கேரளாவில், ஓட்டுச்சாவடி பணியாளர்களை, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அழைத்துச் செல்வதாக ஆசை காட்டிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவர் பாவா ஹாஜி மீது வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

கேரளாவில் உள்ள, 140 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 9ல் தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, மாநிலம் முழுதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மலப்புரம் மாவட்டம் தவனுார் தொகுதியில், ஐக்கிய ஜனநாயக முன்னணி சார்பில் காங்கிரசை சேர்ந்த வி.எஸ்.ஜாய் போட்டியிடுகிறார்.

கடந்த 22ல், இவரை ஆதரித்து கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத் தலைவர் பாவா ஹாஜி பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், 'வி.எஸ். ஜாயை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யும் பூத் பணியாளரை, 15 நாட்கள் ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வோம்' என்றார்.

இது குறித்து, ஆளும் இடதுசாரி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, பாவா ஹாஜி மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

Advertisement