வீதிதோறும் கேட்கிறது.. 'விசில்' சத்தம்! . தேர்தல் முடிந்ததால் மகிழ்ச்சி

போத்தனூர் :நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விசில் சின்னம் நடிகர் விஜயின் த.வெ.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் குப்பை சேகரிக்கும் துாய்மை பணியாளர்கள் விசில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தேர்தல் முடிந்ததையடுத்து நிம்மதி அடைந்துள்ள அவர்கள், மீண்டும் விசில் ஊத துவங்கியுள்ளனர்.

சட்டசபை பொதுதேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த, 23ல் நடந்து முடிந்தது. இதில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு (த.வெ.க.) விசில் சின்னம் ஒதுக்கப்பட்டது.

இதனை தங்களுக்கு சாதகமாக்கி கொண்ட த.வெ.க.,வினர் பிரசாரத்தின்போது, சிறுவர், சிறுமியருக்கு விசிலை கொடுத்து ஊத வைத்து, தங்கள் சின்னத்தை மக்களிடம் எளிதாக கொண்டு சேர்த்தனர்.

இந்நிலையில், தூய்மை பணியாளர்கள் விசில் அடித்து குப்பைக்கழிவு சேகரிப்பது தி.மு.க. அ.தி.மு.க. உள்ளிட்ட இதர கட்சியினருக்கு கண்ணை உறுத்தியது.

இதையடுத்து விசில் அடிக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.

வீடு, வீடாக சென்று 'குப்பை வண்டி....குப்பை வண்டி' என சத்தமிட்டு குப்பைக்கழிவு சேகரிக்க பணியாளர்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

அதுபோல் பிரசாரத்தின்போது ஜமாப், பறை அடிப்போர், விசில் அடிக்க, கட்சியினர் தடை விதித்தனர். இதனால் அந்த தொழில் செய்வோர் இதுலயுமா கைவைக்கணும் என முணுமுணுத்தனர்.

இந்நிலையில் தேர்தல் முடிந்ததையடுத்து, நேற்று முன்தினம் முதல் தூய்மை பணியாளர்கள் மீண்டும் விசில் அடித்து, குப்பை சேகரித்து வருகின்றனர்.

பணியாளர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் முன் விசில் அடிப்போம். மக்கள் குப்பை கழிவை கொண்டு வந்து தந்தனர். எங்கள் வேலையும் சுலபமாக இருந்தது.

தேர்தல் சின்னமாக இதை ஒதுக்கியதால், விசில் அடிக்க கூடாது என அறிவுறுத்தியதால் அதிக சிரமம் ஏற்பட்டது. தற்போது மீண்டும் விசில் அடிக்க துவங்கி விட்டோம். நிம்மதியாக வேலை பார்க்க முடிகிறது' என்றனர்.

Advertisement