மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்

5

மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தேரோட்டம் மாசி வீதிகளில் இன்று கோலாகலமாக நடந்து வருகிறது. மே 1 வைகையாற்றில் இறங்க, இன்று மாலை அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு தங்கப்பல்லக்கில் கள்ளழகர் புறப்படுகிறார்.

மதுரை மீனாட்சி கோவிலின் சித்திரை திருவிழா, கடந்த ஏப்., 19ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., 26ல் அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், திக் விஜயம் முடிந்து, நேற்று, மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று தேரோட்டம் விமர்சையாக தொடங்கியது. அதிகாலையில், தேரடி பகுதிக்கு, மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரரும், அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வந்தனர். பெரிய தேரில் சுந்தரேசுவரர் பிரியாவிடை சமேதராகவும், சிறிய தேரில் சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மனும் எழுந்தருளுகின்றனர். இன்று காலை, 6:00 மணிக்கு துவங்கிய தேரோட்டம், மாசி வீதிகளில் நடந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், வடம் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர்.
Tamil News
Tamil News
Tamil News

அழகர்:



மதுரை வைகை ஆற்றில் இறங்க அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், இன்று மாலை, 6:15 மணிக்கு தங்கப்பல்லக்கில் புறப்படுகிறார். நாளை அதிகாலை 5:30 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. இரவு 11:30 மணிக்கு தல்லாகுளம் பெருமாள் கோவிலில் தங்கக்குதிரையில் எழுந்தருளி, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை அணிந்து கொண்டு புறப்படுகிறார்.

தமுக்கம் எதிரே, ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின், மே 1 அதிகாலை 5:30 முதல் 5:55 மணிக்குள் வைகையாற்றில் எழுந்தருளுகிறார். மதியம் ராமராயர் மண்டபத்தில் அங்கப்பிரதட்சணம் நடக்கிறது. அன்றிரவு வண்டியூர் பெருமாள் கோவிலில் எழுந்தருளுகிறார். மே 2 காலை 11:30 மணிக்கு தேனுார் மண்டபத்தில் சேஷ வாகனத்திலும், மதியம் கருட வாகனத்திலும் சுவாமி எழுந்தருளி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் தருகிறார்.

அன்றிரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சி நடக்கிறது. மே 4 அதிகாலை பூப்பல்லக்கில் மீண்டும் கள்ளழகராக அழகர்கோவில் நோக்கி சுவாமி புறப்பட்டு, மே 5 காலை 10:40 மணி முதல் 11:10 மணிக்குள் இருப்பிடம் சேருகிறார்.

Advertisement