திருத்தணி முருகன் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

திருத்தணி: சித்திரை திருவிழாவையொட்டி நேற்று, திருத்தணி முருகன் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

திருத்தணி முருகன் கோவிலில் சித்திரை திருவிழா, கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 நாட்கள் நடக்கும் இவ்விழாவில், புலி வாகனம், வெள்ளி மயில் வாகனம், சிம்ம வாகனம், ஆட்டுக்கிடா வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் உற்சவர் முருகன், வள்ளி - தெய்வானையுடன், வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

சித்திரை திருவிழாவின் ஏழாவது நாளான ஏப்ரல் 27 இரவு தேர் திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவர் முருகன், வள்ளி- - தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் அறங்காவலர்கள், தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். பின், பக்தர்கள் வடம் பிடித்து கோவில் மாட வீதிகளில் இழுத்து வந்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன், 'அரோகரா... அரோகரா' என முழக்கமிட்டனர். இன்று முருகன் - -தெய்வயானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

Advertisement