புதுச்சேரி மதுவை தமிழகத்திற்கு எடுத்து வரலாமா? ஐகோர்ட் உத்தரவால் குழப்பம்

10

- நமது நிருபர் -

சென்னை ஐகோர்ட் சமீபத்தில் பிறப்பித்த ஒரு தீர்ப்பால், இனி தனி நபர் நுகர்வுக்காக, புதுச்சேரி மது பானங்களை, 4.5 லிட்டர் அளவுக்கு கொண்டு செல்லலாமா என்ற குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய இருப்பதாக, கடலுார் எஸ்.பி., ஜெயகுமார் நேற்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில் கொண்டு சென்றவர் மீது தொடரப்பட்ட வழக்கை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்துஉள்ளது. தனி நபர் ஒருவர், தன் பயன்பாட்டுக்கு, 4.5 லிட்டர் மதுவை வைத்திருக்க, தமிழக அரசு விதிகள் அனு மதிக்கும் நிலையில், புதுச்சேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட, 1.680 லிட்டர் மதுபானம் மட்டுமே அவரிடம் இருந்ததால், அந்த வழக்கை ரத்து செய்வதாக, ஐகோர்ட் தெரிவித்திருந்தது.

இதனால் இனி, புதுச்சேரியில் இருந்து அனுமதிக்கப்பட்ட அளவில் மதுபானத்தை தமிழகத்திற்கு எடுத்து செல்லலாம் என்று புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் தகவல் பரவியது.

இது குறித்து புதுச்சேரி, கலால் அதிகாரிகள் கூறியதாவது:
புதுச்சேரியில், தனி நபர் மதுபானங்கள் கொண்டு செல்ல, புதுச்சேரி கலால் சட்டம் அனுமதிக்கிறது. இதன்படி, தனி நபர் ஒருவர், தன் சொந்த நுகர்வுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை 4.5 லிட்டர் வரை வைத்திருக்கலாம்.

வெளிநாட்டு இறக்குமதி மதுபானமாக இருந்தாலும், 4.5 லிட்டர் வைத்திருக்கலாம். பிராந்தி, விஸ்கி, ஜின், ரம்மிற்கு இது பொருந்தும். பீர் என்றால் 9 லிட்டர், கள்ளுக்கு 1 லிட்டர் தன் நுகர்வுக்காக வைத்திருக்கலாம். சாராயம், 4 லிட்டர் வைத்திருக்கலாம்.

அந்த அளவை கடந்து வைத்திருந்தால், அபராதத்துடன் வழக்கு, போடலாம். இவை அனைத்துமே புதுச்சேரி எல்லைக்குள் தான் பொருந்தும். ஆனால், அந்த மதுபானங்களை தமிழக பகுதிக்கு கொண்டு சென்றால் பொருந்தாது.

புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்குள் மதுபானம் கொண்டு வருவது சட்டப்படி குற்றம். அந்தந்த மாநில கலால் துறையின் அனுமதி இல்லையென்றால், கடத்தலாக கருதி வழக்கு பதிவு செய்வர்.

தமிழகத்தில் சாராயம், கள்ளுக்கு தடை உள்ளது. அதே வேளையில், புதுச்சேரியில், 4 லிட்டர் சாராயம், 1 லிட்டர் கள் கொண்டு செல்லலாம். இப்படி இருக்கும் போது, புதுச்சேரி கலால் விதியை காரணம் காட்டி, தமிழக பகுதிக்கு மதுபானங்களை கொண்டு செல்வது தவறு.

ஐகோர்ட் கூறிவிட்டது என்று, புதுச்சேரி மதுவுடன் தமிழக எல்லையில் நுழைந்தால், சிறைக்கு தான் செல்ல நேரிடும். இரு மாநிலங்களுக்கும் பொதுவான, தெளிவான வழிகாட்டுதல் வரும் வரை, மதுப்பிரியர்கள் உஷாராக இருப்பதே நல்லது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழக கலால் போலீசார் கூறுகையில், 'தமிழகத்தில் தனி நபர் ஒருவர், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களை, 4.5 லிட்டர், பீர் 9 லிட்டர் வரை கொண்டு செல்லலாம். இந்த மதுபானங்கள் டாஸ்மாக் கடையில் வாங்கியதாக இருக்க வேண்டும்; ரசீதையும் வைத்திருக்க வேண்டும்.

'வெளிநாட்டில் இருந்தோ, வெளி மாநிலத்தில் இருந்தோ ஒரு சொட்டு மதுவை கூட தமிழகத்திற்கு எடுத்து வரக்கூடாது' என்றனர்.

கடலுார் எஸ்.பி., ஜெயக்குமார் கூறியதாவது: தனிநபர் ஒருவர், 4.5 லிட்டர் ஐ.எம்.எப்.எல்., மதுபானம் எடுத்து வரலாம் அல்லது சொந்த உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளலாம் என்பது புதுச்சேரி மாநிலத்தில் இருந்து எடுத்து வரப்படும் மதுபானங்களுக்கு பொருந்தாது. சமீபத்தில் சென்னை ஐகோர்ட் வெளியிட்ட தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement