குடிநீர் திட்டப்பணி முடித்து 5 ஆண்டுகளாகியும் 'பில்' வழங்காததால் ஒப்பந்ததாரர்கள் தவிப்பு
பெருங்குடி: குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை பணி முடித்து ஐந்து ஆண்டுகளாகியும், அதற்குண்டான தொகையை குடிநீர் வாரியம் வழங்காமல் அலைக்கழிப்பதால், ஒப்பந்ததாரர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் 11 வார்டுகள் உள்ளன. இங்கு, 'இல்லந்தோறும் இணைப்பு' எனும் திட்டத்தின் கீழ், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைக்கும் பணிகள், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டன.
இப்பணிகள், 50க்கும் மேற்பட்ட 'கிளாஸ் 5' எனும் சிறு ஒப்பந்ததாரர்களிடம் வழங்கப்பட்டன. குழாய் பதிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்து ஐந்து ஆண்டுகளாகியும், அப்பணிகளுக்கான 'பில்' தொகையை இதுவரை வழங்காமல், சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தினர் இழுத்தடித்து வருவதாக ஒப்பந்ததாரர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
பெயர் சொல்ல விரும்பாத ஒப்பந்ததாரர் ஒருவர் கூறியதாவது:
'இல்லந்தோறும் இணைப்பு' திட்டத்தின் கீழ், வீடுதோறும் குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு பணியை சென்னை குடிநீர் வாரியம், சிறு ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்தது.
ஒவ்வொரு ஒப்பந்ததாரருக்கும் 230 மீட்டர் நீளத்திற்கு திட்ட மதிப்பீடு வழங்கப்பட்டு, குறிப்பிட்ட வீடுகளுக்கு இணைப்பு வழங்க வேண்டும். இதற்கான திட்ட மதிப்பீட்டு தொகை 5 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
இணைப்பு பெற்ற வீடுகளில் இருந்து, இணைப்பிற்கான முன்வைப்புத் தொகை மற்றும் சாலை துண்டிப்பிற்கான கட்டணம் ஆகியவற்றை நாங்களே பயனாளிகளிடம் வசூலித்து, குடிநீர் வாரியத்திடம் முறையாக ஒப்படைத்துள்ளோம்.
ஆனாலும், பணிகள் முடிந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகியும், எங்களுக்கான ஒப்பந்த தொகையை வாரிய அதிகாரிகள் வழங்காமலும், உரிய பதிலை அளிக்காமலும் அலைக்கழித்து வருகின்றனர்.
இதனால், பணிபுரிந்த தினக்கூலி தொழிலாளர்களுக்கு, வெளியில் வட்டிக்கு கடன் வாங்கி, அவர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒப்பந்த தொகை வராததால், வட்டி அதிகரித்து, கடன் சுமையால் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம்.
கைவசம் போதிய பணம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், அடுத்த பருவத்திற்கு குழந்தைகளுக்கு பள்ளி, கல்லுாரி கட்டணம் செலுத்த முடியாமலும் சிரமப்படுகிறோம்.
சம்பந்தப்பட்ட குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய அதிகாரிகள், இப்பிரச்னையை கவனத்தில் கொண்டு, 50 ஒப்பந்ததாரர்களுக்கும், செய்த பணிகளுக்கான ஒப்பந்த தொகையை விடுவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
'தாயுமானவர்' திட்ட நிதி தாமதம்; கூட்டுறவு சங்கங்கள் தவிப்பு
-
வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
மேற்கு வங்கத்தில் 2ம் கட்ட ஓட்டுப்பதிவு தொடங்கியது
-
தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார்? இன்று மாலை வெளியாகிறது Exit Polls
-
மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்; அழகர் இன்று மாலை புறப்படுகிறார்
-
'போர்வெல்' பணி தடுத்து நிறுத்தம்