பள்ளிக்கு கூடுதல் கட்டடம் அவசியம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் தென்பழஞ்சி நடுநிலைப்பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளிக்கு பஸ் ஸ்டாப் பகுதியில் முன்பு 3 கட்டடங்கள் இருந்தன. அவற்றில் 2 கட்டடங்கள் சேதமடைந்ததால் இடிக்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருத்துவமனைக்கு அருகே புதிய கட்டடம் கட்டி செயல்பட்டு வருகிறது.‌

பழைய கட்டடம், நுாலகம் அருகேயுள்ள கட்டடம், புதிய கட்டடம் ஆகியவற்றில் மாணவர்கள் படிக்கின்றனர்.‌ மூன்று இடங்களில் பள்ளிக்கூடம் செயல்படுவதால் ஆசிரியர்களும், மாணவர்களும் சிரமம் அடைகின்றனர். போதிய இடவசதி இல்லாததால் பல சமயம் பழைய கட்டடத்தில் மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது.

புதிய கட்டடத்தில் சுற்றுச்சுவர் இல்லாததால் இரவு நேரம் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. பாதுகாப்பில்லாத சூழ்நிலையால் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளை நாகமலை புதுக்கோட்டை, திருநகர் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். கால்நடை மருத்துவமனை அருகே புதிய பள்ளிக் கட்டடம் பகுதியில் இடவசதி இருப்பதால் அங்கு கூடுதலாக 2 கட்டடங்களும், சுற்றுச்சுவரும் கட்டி ஒரே இடத்தில் பள்ளி செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

Advertisement