குன்னுார் மலை ரயில் நிலையத்தில் பாரம்பரிய ஜன்னல்கள் மாற்ற எதிர்ப்பு

குன்னுார்: குன்னுார் மலை ரயில் நிலையத்தின் பாரம்பரிய ஜன்னல்கள் மாற்ற எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குன்னுார், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில் ‘யுனெஸ்கோ’ அங்கீகாரம் பெற்றுள்ளது.

1897ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த மலை ரயில் நிலையம் கருங்கல் சுவர்கள் மற்றும் சிவப்பு நிற ஓடுகள், வளைவு செதுக்கங்களுடன் பழமையான கட்டடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக கம்பீரமாக உள்ளது.

இந்நிலையில், ‘அம்ரித் பாரத்’ திட்டத்தின் கீழ் ரயில் நிலையம் பாரம்பரியம் மாறாமல் பொலிவுடன் கட்டப்பட்டு வந்தது.

தற்போது, இந்த ரயில் நிலையத்தின் பிரதான கட்டட அமைப்பு பகுதியில் உள்ள அழகிய பாரம்பரியமிக்க வளைவு ஜன்னல்கள் திடீரென அகற்றி மாற்ற பணிகள் நடந்து வருகிறது.

மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில்,‘‘உலக புகழ்பெற்ற இந்த மலை ரயில் நிலையத்தின் வரலாற்றை அடையாளங்களை அழிக்கும் வகையிலான இச்செயலை உடனே தடுத்து நிறுத்த வேண்டும். பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கோட்டம் உட்பட ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது,’’ என்றார்.

Advertisement