பிரேமலதாவுக்கு தேர்தலில் முதல் வெற்றி இறுதிவரை இழுபறியால் திக்..திக்..
விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா, தேர்தலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா, பா.ம.க., டாக்டர் தமிழரசி, நாம் தமிழர் ஆனந்தி தண்டபாணி, த.வா.க., அறிவழகன், த.வெ.க., விஜய் உட்பட 18 வேட்பாளர்கள் களமிறங்கினர்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 2,40,844 வாக்காளர்களில் தபால் ஓட்டுகள் உட்பட 2,08,431 பேர் ஓட்டுகள் பதிவாகின.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், தபால் ஓட்டுகள் அனைத்தும், கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் சீல் வைக்கப்பட்டன. தேர்தல் கவுண்டிங் பார்வையாளர் அசோக்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா மற்றும் வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் முன்னிலையில் காலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவங்கியது.
மாலை 6:30 மணி வரை, 23 சுற்றுகளாக நடந்த ஓட்டு எண்ணிக்கையில் தே.மு.தி.க., வேட்பாளர் பிரேமலதா 69,351 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். த.வெ.க., வேட்பாளர் விஜய் 66,964 ஓட்டுகள் பெற்றிருந்தார். இதன்மூலம் 2,387 ஓட்டுகள் வித்தியாசத்தில் பிரேமலதா வெற்றி பெற்றிருந்தார். பா.ம.க., வேட்பாளர் தமிழரசி 59,791 ஓட்டுகளுடன் மூன்றாமிடம் பெற்றார்.
மாலை 5:30 மணி வரை மூன்று வேட்பாளர்களுக்கும் இழுபறி நீட்டித்து வந்ததால், ஓட்டு எண்ணும் மையம் பரபரப்பாகவே காணப்பட்டது. அதன்பின், தே.மு.தி.க., – த.வெ.க.,வுக்கு மட்டுமே போட்டி அதிகரித்தது. மேலும், நாம் தமிழர் ஆனந்தி தண்டபாணி 6,047, த.வா.க., அறிவழகன் 1,896 ஓட்டுகளுடன் நான்கு மற்றும் ஐந்தாமிடத்தில் இருந்தனர்.
மற்ற வேட்பாளர்கள் சொற்ப ஓட்டுகளே பெற்றிருந்தனர். 755 வாக்காளர்கள் நோட்டாவுக்கு ஓட்டுகளை பதிவு செய்திருந்தனர். 262 ஓட்டுகள் செல்லாதவை. இரவு 7:30 மணிக்கு தே.மு.தி.க., வேட்பாளரின் முகவரும், அக்கட்சியின் மாவட்ட செயலாளருமான சிவக்கொழுந்து முன்னிலையில் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து, அதற்குரிய ஒப்புதல் கடிதத்தை தேர்தல் நடத்தும் அலுவலர் விஷ்ணுபிரியா வழங்கினார்.
கடந்த 2021 தேர்தலில், முதன்முறையாக பொதுத்தேர்தலில் களமிறங்கிய தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா, அ.ம.மு.க., கூட்டணியில் படுதோல்வியை சந்தித்தார். தற்போது, தி.மு.க., கூட்டணியில் வெற்றி பெற்று, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.