நீட் தேர்வு வினாத்தாள் கசிவு குறித்த போலிப்பதிவுகள்; கட்டுப்படுத்த சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
புதுடில்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் பீதியை ஏற்படுத்தும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்டா, கூகுள் மற்றும் டெலிகிராம் உள்ள முக்கிய சமூக ஊடக தளங்களின் ஆதரவை மத்திய அரசு நாடியுள்ளது.
கடந்த மே 3ம் தேதி நாடு முழுவதும் நடந்த இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து ரத்து செய்யப்பட்டது. தற்போது வரும் ஜூன் 21ம் தேதி நீட் மறு தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. வினாத்தாள் கசிவு சர்ச்சைக்கு பிறகு, மறுதேர்வின் மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கும் முயற்சிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில் பொய்யான குற்றச்சாட்டுக்கள் மற்றும் பீதியை ஏற்படுத்தும் பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்டா, கூகுள் மற்றும் டெலிகிராம் உள்ள முக்கிய சமூக ஊடக தளங்களின் ஆதரவை மத்திய அரசு நாடியுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் உயர்மட்டக் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
தேர்வு வினாத்தாள் கசிவு குறித்து போலி குற்றச்சாட்டுகளை முன்வைத்து பதிவுகளை வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: முக்கியத் தேர்வுகளுக்கு முன்பு மிகவும் தீவிரமாகச் செயல்படும் டெலிகிராம் சேனல்கள் மற்றும் பாட்கள் மூலம் போலி
பதிவுகள் அதிகமாக பரவுவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
இதுபோன்ற பல சேனல்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பீதியையும் குழப்பத்தையும் தூண்டும் வகையில், வினாத்தாள் கசிவு குறித்து தவறான தகவல்களைப் பரப்புகின்றன. பல சந்தேகத்திற்கிடமான சேனல்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது.
போலித் தகவல்கள் மற்றும் பீதியை பரப்பும் சேனல்களை விரைவாக அகற்றுவதை உறுதிசெய்ய தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றுமாறு தர்மேந்திர பிரதான் சமூக ஊடக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
தேர்வுக்கு முன்னதாக, டிஜிட்டல் கண்காணிப்பை வலுப்படுத்த பாதுகாப்பு அமைப்புகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுப்பது உறுதி செய்வதற்காக, மாநிலங்கள் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் டிஜிபி ஒருங்கிணைந்து கூட்டங்களை நடத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மறுதேர்வின் போது போக்குவரத்து, குடிநீர் மற்றும் தடையற்ற ஏற்பாடுகள் உள்ளிட்ட போதுமான மாணவர் வசதிகளை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
வேலை நிறுத்த உரிமை பாதுகாப்பு சர்வதேச நீதிமன்றம் முக்கிய உத்தரவு
-
ஏர்போர்ட்டில் 'ஏர் இந்தியா' விமானம் விபத்தில் சிக்கியது; 181 பேர் தப்பினர்
-
'எபோலா' வைரஸ் பரவலால் ஆப்ரிக்க மாநாடு ஒத்திவைப்பு
-
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி சுட்டுக்கொலை
-
அழகுக்காக போடப்படும் மருந்து ஊசிகளை அழகு மையங்கள் பயன்படுத்தக்கூடாது மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு
-
மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை: சிவகுமார்