ஏர்போர்ட்டில் 'ஏர் இந்தியா'  விமானம் விபத்தில் சிக்கியது; 181 பேர் தப்பினர்

1

பெங்களூரு: பெங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கும் போது, 'ஏர் இந்தியா' விமானம் விபத்தில் சிக்கியது. ஆனாலும் விமானத்தில் பயணம் செய்த, 181 பயணிய ரும் காயமின்றி உயிர் தப்பினர்.

டில்லியில் இருந்து கர்நாடகாவின் பெங்களூரு கெம்பே கவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு, நேற்று காலை 8:00 மணிக்கு, ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் புறப்பட்டது. அதில், 181 பயணியர் பயணம் செய்தனர்.

காலை 10:55 மணிக்கு பெங்களூரு விமான நிலையத்தின், இரண்டாவது முனையத்தின் ஓடுபாதையில் விமானம் மெல்ல தரையிறங்கிய போது, திடீரென விமானிகள் விமானத்தை மேல்நோக்கி இயக்கினர். ஆனாலும் விமானத்தின் பின்பக்கத்தில் உள்ள வால் பகுதி ஓடுபாதையில் உரசியது.

இதனால் பயணியர் அதிர்ச்சியில் உறைந்தனர். சுதாரித்து கொண்ட விமானிகள், விமானத்தை பத்திரமாக ஓடுபாதையில் தரையிறக்கினர்.

அதிலிருந்த, 181 பயணியரும் பத்திரமாக இறக்கப்பட்டனர். ஓடுபாதையில் உரசியதால் வால் பகுதி சேதம் அடைந்தது.

அந்த விமானத்தின் டில்லி பயணம் ரத்து செய்யப்பட்டது. டிக்கெட் முன்பதிவு செய்த பயணியர், மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது, சரக்கு விமானம் ஒன்று பறக்க தயாராகி கொண்டு இருந்தது.

அந்த விமானத்தில் இன்ஜின்களில் இருந்து வெளிப்பட்ட வலுவான உந்து விசையால், ஏர் இந்தியா விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் விமானிகள் மீண்டும் விமானத்தை, மேல்நோக்கி இயக்கியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி விசாரணை நடக்க உள்ளது.

Advertisement