வீட்டில் 55 சவரன் நகை மாயம் மளிகை கடைக்காரர் புகார்

திருத்தணி: வீட்டில் வைத்திருந்த, 55 சவரன் நகைகள் திடீரென மாயமானதாக, மளிகை கடைக்காரர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருத்தணி சேகர்வர்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர், 47. இவர், தனது வீட்டின் முன்பகுதியில், மளிகை கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவரது மனைவி கீர்த்தனா, ஒரு மாதத்திற்கு முன், 55 சவரன் நகைகளை அலமாரியில் வைத்திருந்தார். நேற்று, தன் உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிக்கு செல்வதற்காக, அலமாரியில் வைத்திருந்த நகைகளை எடுக்க சென்ற போது, அங்கு நகைகள் இல்லை.

அதிர்ச்சி அடைந்த கீர்த்தனா, கணவர் சுதாகரிடம் கூறியுள்ளார். திருத்தணி காவல் நிலையத்தில் சுதாகர் புகார் அளித்தார். அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்து விசாரித்தனர்.

அதில், சுதாகர் வீட்டின் மாடியில், எலக்ட்ரீஷியனாக பணிபுரியும், தனசேகர் என்பவர் கடந்த மூன்று மாதங்களாக தங்கியிருந்ததும், அவர் ஒரு வாரமாக மாயமாகியுள்ளதும் தெரிந்தது. சந்தேகத்தின் பேரில், போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Advertisement