இன்சூரன்ஸ் : காப்பீட்டு பாலிசியில் 'நாமினி'யின் முக்கியத்துவம்

இன்சூரன்ஸ் தொடரில் நாம் வாங்கிய இன்சூரன்ஸ் பாலிசிகளின் உண்மையான நோக்கம் நிறைவேற வேண்டும் என்றால், அவற்றை சரியாக பராமரிப்பதும் நிர்வகிப்பதும் எவ்வளவு முக்கியம் என்பதை கடந்த மாதம் பார்த்தோம்.

வாகன காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்ற பொது காப்பீடுகளின் புதுப்பிப்பு தேதிகள் மற்றும் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளின் தவணை பிரீமியம் செலுத்தும் தேதிகள், முதிர்வு தேதிகள் ஆகியவற்றை ஒரு கால அட்டவணைப்படி தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.

அப்போதுதான், தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, சரியான நேரத்தில் கிளைம் பெற முடியும்.
Latest Tamil News
விளம்பர தொந்தரவுகள்

அதேபோல், நம்முடைய முகவரி, போன் எண் போன்ற தொடர்பு விபரங்களை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில், இன்சூரன்ஸ் நிறுவனத்தின் முக்கிய தகவல்கள் நம்மை வந்தடையாது.
(ஆனால், இந்த விபரங்கள் எப்படியோ கசிந்து மற்ற நிறுவனங்களிடம் இருந்து 'எங்களிடம் பாலிசி எடுங்கள்' என்ற விளம்பர தொந்தரவுகளும் வரக்கூடும்).

இவை எல்லாவற்றையும் விட நாம் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய, தொடர்ந்து புதுப்பித்து வைத்திருக்க வேண்டிய ஒரு அம்சம் தான் 'நாமி னேஷன்' (வாரிசு நியமனம்).

நாமினேஷன் என்பது, 'இந்த பணம் இறுதியில் யாருக்கு செல்ல வேண்டும் என்று குறிப்பிடுவது' என்று பலரும் தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அது ஒரு முழுமையற்ற உண்மை.

உண்மை என்னவென்றால், நாம் ஒருவரை நாமினியாக குறிப்பிடும்போது, 'எனக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், இந்த முதலீட்டு தொகையை இந்த நபரிடம் ஒப்படையுங்கள்' என அந்த நிதி நிறுவனத்திற்கு கூறுகிறோம்.

அதாவது, அந்த தொகையை பெற்றுக்கொள்ளும் அதிகாரத்தை மட்டுமே நாம் அவர்களுக்கு வழங்குகிறோம். பணத்தை அவரிடம் ஒப்படைத்தவுடன் அந்த நிறுவனத்தின் பொறுப்பு முடிந்துவிடுகிறது.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட காரணத்தினாலேயே அந்த நபர் மட்டுமே அதற்கு முழு உரிமையாளர் ஆகிவிட முடியாது. அந்த பணத்திற்கான இறுதி உரிமை என்பது குடும்ப ஒப்பந்தங்கள், உயில் அல்லது வாரிசுரிமை சட்டங்களின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படும்.


வாரிசுரிமை சட்டம்




இதில், ஏதேனும் சிக்கல் அல்லது கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அதை வாரிசுரிமை சட்டம் அல்லது நீதிமன்றம் வாயிலாகவே தீர்க்க முடியும்.
வங்கி சேமிப்பு கணக்கு, நிலையான வைப்பு, டிமேட் கணக்கு போன்றவற்றுக்கும், வாகனம் வாங்கும்போதே ஆர்.டி.ஓ., அலுவலகம் வாயிலாகவும் நாமினேஷன் செய்யும் வசதி உள்ளது. ஆனால், இன்சூரன்ஸ் பாலிசிகளில் மட்டும் நாமினேஷனுக்கு ஒரு கூடுதல் பாதுகாப்பு அம்சம் உள்ளது.

நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர், வாழ்க்கை துணை, பிள்ளைகள்) நாமினியாக இருந்தால், அவர்கள் பாலிசி தொகையின் பயனாளிகளாக கருதப்படுவர். அதாவது, அந்த பணம் அவர்களுக்கே போய்ச்சேரும்.

குடும்பத்தை சாராதவர்கள் அல்லது துாரத்து உறவினர்கள் நாமினியாக இருந்தால், அவர்கள் வெறும் பாதுகாவலர் போல மட்டுமே கருதப்படுவர். சட்டப்பூர்வ வாரிசுகள் பின்னர் அந்த தொகைக்கு உரிமை கோர முடியும்.

நாமினேஷனை நாம் எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம் அல்லது ரத்து செய்யலாம். ஆனால், அவற்றை முறையாக எழுத்துப்பூர்வமாக செய்து, சம்பந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து உரிய அங்கீகார ரசீது அல்லது 'அக்னாலெட்ஜ்மென்ட்' நம்பர் வாங்கி வைத்து கொள்வது அவசியம்.


கேஸ்கேடிங் நாமினேஷன்


திருமணத்திற்கு முன் பெற்றோரை நாமினியாக வைத்திருப்பவர்கள், திருமணத்திற்கு பின் வாழ்க்கைத்துணையின் பெயரை சேர்க்க விரும்பலாம்.
குழந்தைகள் பிறந்த பின் அவர்களின் பெயரையும் இணைக்கலாம். பல நாமினிகள் இருந்தால், யாருக்கு எத்தனை சதவீதம் தொகை கிடைக்க வேண்டும் என்பதையும் தெளிவாக குறிப்பிட வேண்டும்.

'கேஸ்கேடிங் நாமினேஷன்' என்பது ஒரு சிறந்த முறை. முதலில், உங்கள் வாழ்க்கைத்துணையை நாமினியாக குறிப்பிடலாம்; உங்களுக்கு முன்பே அவருக்கும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால், அடுத்தபடியாக அந்த தொகை யாருக்கு செல்ல வேண்டும் என்பதையும் முன்கூட்டியே இதில் வாரிசுரிமை செய்ய முடியும்.

ஏற்கனவே இருந்த நாமினி இறந்துவிட்டாலோ அல்லது குடும்ப சூழல் காரணமாக அவரை மாற்ற நினைத்தாலோ உடனே புதுப்பிக்க வேண்டும்.

நாமினேஷனில் உள்ள மேலும் பல நுணுக்கங்களையும், இன்சூரன்ஸ் பாலிசியின் உரிமையை மாற்றுவதற்கான பிற வழிகளையும் அடுத்த வாரம் விரிவாக பார்ப்போம்.

Advertisement