இணைப்புச்சாலை பணி இழுபறி அதிகரிக்கும் விபத்துக்கள்

உடுமலை: பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், தாராபுரம் ரோடு பாலம் பகுதியில் பணிகள் இழுபறியாகி வருவதால், வாகன விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

பொள்ளாச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல், ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

ஆனால், மடத்துக்குளம்- திண்டுக்கல் வரை பணிகள் முடிந்து, சுங்கச்சாவடி அமைத்து, சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட்டு வருவதால், இந்த ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில், உடுமலையிலிருந்து தாராபுரம் செல்லும் ரோட்டில், பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் ரோடு இணையும் பகுதியில், இரு புறமும் சர்வீஸ் ரோடுகள் அமைந்துள்ளதோடு, நான்கு வழிச்சாலையில், இணைப்பு ரோடாக, பாலப்பம்பட்டியிலிருந்து வரும் ரோடும், தாராபுரம் ரோடு பகுதியில் இணைகிறது.

நான்கு வழித்தடம் இணையும் இப்பகுதியில், ரோடு அகலப்படுத்தப்பட்டு, ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின.

பல இடங்களில் குழிகள் தோண்டப்பட்ட நிலையில், அப்பணிகளும் பாதியில் நிறுத்தப்பட்டது.

இதனால், நான்கு வழிச்சாலை, பாலப்பம்பட்டியிலிருந்து இணையும் ரோடு மற்றும் தாராபுரம் ரோடுகளில் வரும் வாகனங்கள், செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, ரோடுகள் இணையும் பகுதியில் அடிக்கடி விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது.

மேலும், பாலம் பகுதி மற்றும் ரோடுகளில், போதிய மின் விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் வழி தெரியாமல், வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன.

எனவே, பிரதான ரோடுகள் சந்திப்பு பகுயில் ரவுண்டானா மற்றும் ரோடு அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்கவும், தேவையான மின் விளக்குகள் அமைக்கவும் தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement