ராகுல், சுப்மன் கில் கலக்கல் சதம்: முதல் நாளில் இந்தியா ஆதிக்கம்

புதிய சண்டிகர்: ராகுல், சுப்மன் கில் சதம் அடிக்க, இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்டியது.


இந்தியா, ஆப்கானிஸ்தான் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி, புதிய சண்டிகரில் (பஞ்சாப்) உள்ள மஹாராஜா யதவிந்திர சிங் மைதானத்தில் துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய கேப்டன் சுப்மன் கில், 'பேட்டிங்' தேர்வு செய்தார்.



சுதர்சன் அரைசதம்: இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (24) ஏமாற்றினார். பின் கே.எல்.ராகுல், தமிழகத்தின் சாய் சுதர்சன் அசத்தினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 139 ரன் சேர்த்தனர். ஒருபக்கம் ராகுல் அடக்க வாசிக்க, மறுபக்கம் சுதர்சன் அதிவேகமாக ரன் சேர்த்தார். கரோட்டே ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண்டரி விளாசி, அரைசதம் கடந்தார். முகமது சலீம் பந்தில் அவுட்டான சுதர்சன் (81 ரன், 104 பந்து, 13x4) சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். ரஹ்மான் பந்தில் 2 ரன் எடுத்த ராகுல், டெஸ்டில் 12வது சதம் எட்டினார். அடுத்த பந்தில் ராகுல், 100 ரன்னுக்கு (165 பந்து, 11x4) வெளிறேினார்.


ரிஷாப் அதிரடி: கேப்டன் சுப்மன் கில், ரிஷாப் பன்ட் சேர்ந்து, ஆப்கன் பந்துவீச்சை விளாசித் தள்ளினர். பயிற்சி போட்டி போல விளையாடிய இவர்கள், நான்காவது விக்கெட்டுக்கு 121 ரன் சேர்த்தனர். அப்துல் ஓவரில் ரிஷாப் மூன்று சிக்சர் பறக்கவிட்டார். சலீம் பந்தில் ஒரு ரன் எடுத்த சுப்மன், டெஸ்டில் 11வது சதம் அடித்தார். ரிஷாப் பன்ட்டும் அரைசதம் எட்டினார். முதல் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி முதல் இன்னிங்சில் 368/3 ரன் குவித்தது. சுப்மன் (103 ரன், 143 பந்து, 11x4, 1x6), ரிஷாப் (50 ரன், 70 பந்து, 2x4, 3x6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி உணவு இடைவேளைக்கு பின் 'டிக்ளேர்' செய்யலாம். பின் குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், மானவ் உள்ளிட்ட மூன்று 'ஸ்பின்னர்'கள் சேர்ந்து ஆப்கானிஸ்தான் அணியை சிதறடிக்கலாம்.


இது உலக மகா நடிப்பு...


ஜியாவுர் ரஹ்மான் வீசிய பந்து (10.1) ராகுல் பேட்டில் பட்டு, விக்கெட்கீப்பர் அப்சர் ஜசாய் கையில் தஞ்சம் புகுந்தது. உடனே 'ஸ்லிப்' திசையில் நின்ற குர்பாஸ் உள்ளிட்ட ஆப்கன் வீரர்கள் 'அவுட்' கேட்டனர். அம்பயர் மறுத்தார். பேட் மீது பந்து பட்ட சத்தம் சரியாக கேட்கவில்லை என கூறி, கீப்பர் அப்சர் தவறு செய்தார். இதனால், கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாகிதி 'ரிவியு' கேட்கவில்லை. 'ரீப்ளே'வில் பந்து, பேட்டில் பட்டுச் சென்றது தெரிந்தது. இதை 'அல்ட்ராஎட்ஜ்' தொழில்நுட்பமும் உறுதி செய்தது. அப்போது 16 ரன்னில் தப்பிய ராகுல், சதம் அடித்தார்.

இது பற்றி இங்கிலாந்து முன்னாள் ஸ்பின்னரும் வர்ணனையாளருமான கிரேம் ஸ்வான் கூறுகையில்,''அந்த தருணத்தில் ஆப்கன் கேப்டன், கீப்பர் சேர்ந்து ராகுலை பார்த்தனர். அவரும் தனது பேட்டில், பந்து படவே இல்லை என்பது போல தலையை அசைத்தார். அவர்களும் நம்பிவிட்டனர். சிறப்பாக நடித்த ராகுலுக்கு ஆஸ்கர் விருது கொடுக்கலாம். கலக்கிட்டீங்க ராகுல் சார்...இந்தாங்க பிடிங்க ஆஸ்கர் விருது,'' என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.


மானவ் அறிமுகம்

இந்திய டெஸ்ட் அணியில் இடது கை 'ஸ்பின்னர்' மானவ் சுதார், 23, நேற்று அறிமுகமானார். இவருக்கு இந்திய தொப்பியை குல்தீப் யாதவ் வழங்கினார். ராஜஸ்தானை சேர்ந்த மானவ், 29 முதல் தர போட்டியில் 129 விக்கெட், 945 ரன் எடுத்துள்ளார். அஷ்வினின் ரசிகர். அவரை போல பந்துவீச்சில் சாதிக்க விரும்புகிறார்.

* இந்திய லெவனில் 3வது முறையாக நேற்று 6 இடது கை பேட்டர்கள் இடம் பெற்றனர்.


நான்காவது இடம்

டெஸ்டில் இந்திய துவக்க வீரராக அதிக சதம் அடித்தவர் பட்டியலில் ராகுல், நான்காவது (11 சதம், 101 இன்னிங்ஸ்) இடம் பெற்றார். முதல் 3 இடங்களில் கவாஸ்கர் (33 சதம், 203 இன்னிங்ஸ்), சேவக் (22 சதம், 168 இன்னிங்ஸ்), முரளி விஜய் (12 சதம், 100 இன்னிங்ஸ்) உள்ளனர்.

* முதல் தர போட்டியில் 9,000 ரன் எட்டினார் ராகுல் (210 இன்னிங்ஸ்).

* சொந்த மண்ணில் நடந்த டெஸ்டின் முதல் நாளில், நேற்று இந்தியா தனது நான்காவது சிறந்த ஸ்கோரை (368/3) பதிவு செய்தது. முதலிடத்தில் 417/2 ரன் (எதிர், இலங்கை, 2009, கான்பூர்) உள்ளது.

* அதிக டெஸ்டில் பங்கேற்ற இந்திய விக்கெட் கீப்பரில் தோனி (90), சயது கிர்மானிக்கு (88) அடுத்து ரிஷாப் பன்ட் (50வது போட்டி) 3வது இடம் பெற்றார். அதில் 50 ரன் எடுத்து அசத்தினார்.


1000 ரன்


டெஸ்டில் அதிவேகமாக 1000 ரன்னை எட்டிய 2வது இந்திய கேப்டன் ஆனார் சுப்மன் கில் (15 இன்னிங்ஸ்). முதலிடத்தில் கவாஸ்கர் (14 இன்னிங்ஸ்) உள்ளார். கேப்டனாக பொறுப்பேற்ற குறைந்த நாளில் அதிவேகமாக சுப்மன் (351 நாள்) 1000 ரன் எட்டினார். சச்சின் (405 நாள்) சாதனையை தகர்த்தார்.

* இந்திய டெஸ்ட் கேப்டனாக அதிக சதம் அடித்த வீரர்களில் சுப்மன் கில் (6 சதம், 15 இன்னிங்ஸ்) ஐந்தாவது இடம் பிடித்தார். முதல் நான்கு இடங்களில் கோலி (20 சதம், 113 இன்னிங்ஸ்), கவாஸ்கர் (11 சதம், 74 இன்னிங்ஸ்), அசார் (9 சதம், 78 இன்னிங்ஸ்), சச்சின் (7 சதம், 43 இன்னிங்ஸ்) உள்ளனர்.

Advertisement