'பொலிடிக்கல் பி.ஏ.,'க்கள் நியமனத்தில் அமைச்சர்கள் புகைச்சல்!

1

“போலீஸ் துறையில நடந்த கூத்தை கேளுங்க வே...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“விளக்கமா சொல்லுங்க பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு, போலீஸ்ல புதுசா சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை உருவாக்கி, முதல்வர் விஜய் உத்தரவு போட்டிருக்காருல்லா...

''இந்த படைக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிற பெண் போலீசாருக்கு, திருவள்ளூர் மாவட்டம், கனகவள்ளிபுரத்தில் இருக்கிற போலீஸ் பள்ளியில் பயிற்சி குடுத்துட்டு இருக்காவ வே...

“இது சம்பந்தமான சுற்றறிக்கையை தயாரிச்ச போலீஸ் துறை ஊழியர் ஒருத்தர், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்பதை, சிங்கப்பூர் சிறப்பு அதிரடிப்படைன்னு, 'டைப்' பண்ணி அனுப்பிட்டாரு...

''இந்த சுற்றறிக்கை, போலீஸ், 'வாட்ஸாப்' குழுவில் பரவி, பலரும், 'சிங்கப்பூர் அதிரடிப்படை எப்ப நம்மூருக்கு வந்துச்சு'ன்னு கிண்டல் அடிச்சிட்டு இருக்காவ வே...” என்றார் அண்ணாச்சி.

“காசு குடுத்து டீ வாங்குங்கன்னு சொல்லிட்டாரு பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...

“சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அறைக்கு தினமும் நிறைய பேர் வருவாங்க... இவங்களுக்கு டீ, காபி குடுத்து உபசரிப்பாங்க பா...

“இதுக்காக, தலைமை செயலக வளாகத்தில் இருக்கும் கேன்டீன்கள்ல, அமைச்சர் ஆபீஸ்கள்ல இருந்து டோக்கன் குடுத்து டீ வாங்குவாங்க... டோக்கன்களை மொத்தமா அமைச்சர் ஆபீஸ்ல குடுத்து, அதுக்கான பணத்தை கேன்டீன் ஊழியர்கள் வாங்கிக்குவாங்க பா...

“அமைச்சர் அலுவலக உதவியாளர்கள் சிலர் இதுலயும் தில்லுமுல்லு பண்ணிடுவாங்க... சமீபத்துல, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் அலுவலகத்துக்கு பல ஆயிரம் ரூபாய் டீ டோக்கன்கள் வந்திருக்குது பா...

“இதை பார்த்து அமைச்சர் அதிர்ச்சி ஆகிட்டாரு... 'இனிமே டோக்கன் குடுத்து டீ வாங்க வேண்டாம்... என் மேஜையில பணம் வச்சிருக்கேன்... யார் வந்தாலும், காசு குடுத்து காபி, டீ வாங்கி குடுங்க'ன்னு சொல்லிட்டாரு பா...” என்றார் அன்வர்பாய்.

“பி.ஏ.,க்கள் நியமனத்துல சர்ச்சை வெடிச்சிடுத்து ஓய்...” என்றார் குப்பண்ணா.

“எந்த துறையிலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“வழக்கமா அமைச்சர் பதவிக்கு வர்றவா, 'பொலிடிக்கல் பி.ஏ.,'வா தனக்கு நம்பிக்கையானவங்க அல்லது உறவினரை நியமிச்சுப்பா... ஆனா, த.வெ.க., அமைச்சர்களால அப்படி செய்ய முடியல ஓய்...

“கட்சியிலும், ஆட்சியிலும் ஆதிக்கம் செலுத்தும் அமைச்சர், சொந்தமா ஒரு வியூக நிறுவனம் வச்சிருக்கார்... அந்த நிறுவனத்தில் இருந்து பலரை தேர்வு செய்து, அமைச்சர்களுக்கு பொலிடிக்கல் பி.ஏ.,வா நியமிச்சிருக்கார்...

''மூத்த அமைச்சர்கள் நாலு பேர் தவிர, மத்த அமைச்சர்களின் பொலிடிக்கல் பி.ஏ.,க்கள் எல்லாருமே, அவரது கம்பெனி ஆட்கள் தானாம் ஓய்...

“அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவே, இப்படி தன் நிறுவன ஆட்களை போட்டிருக்கறதாகவும், அமைச்சர்களை தன் பாதுகாப்பு வளையத்துக்குள்ள வச்சுக்கவும் தான், அவர் இப்படி பண்றதா கட்சிக்குள்ள முணுமுணுப்புகள் கேக்கறது ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.

“அர்ஜுனா, இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement