தெலுங்கானாவில் மீண்டும் தலைதுாக்கும் பிராந்தியவாதம்!:பவன் கல்யாண் அறிவிப்பால் அதிரும் களம்
- நமது சிறப்பு நிருபர் -:
தெலுங்கானா அரசியல் களத்துக்குள் நுழையப் போவதாக ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் அறிவித்திருப்பது, அம்மாநிலத்தில் மீண்டும் பிராந்தியவாத நெருப்பை பற்ற வைத்துள்ளது. இதனால், தெலுங்கானா அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2014ல், ஆந்திரா வில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. இம்மாநிலத்தின் முதல் முதல்வராக, போராட்டத்தை முன்னெடுத்தவர்களில் ஒருவரான பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்றார்.
இதனால், அங்கு பற்றி எரிந்த பிராந்தியவாதம் என்ற நெருப்பு அணைக்கப் பட்டது.
தெலுங்கானாவில் தற்போது ஆட்சி மாறி, காங்., கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக உள்ளார்.
இந்த சூழலில், ஆந்திர அரசியலில் கால் பதித்து, துணை முதல்வராக உள்ள நடிகரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண், தெலுங்கானா அரசியலிலும் நுழையப் போவதாக அறிவித்துள்ளார்.
வதந்தி ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியை கைது செய்வதற்கு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அணுகி, பவன் கல்யாண் உதவி கேட்டதாக தெலுங்கானாவைச் சேர்ந்த அரசியல் விமர்சகரும், பேராசிரியருமான நாகேஸ்வர் சமீபத்தில் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தான், தெலுங்கானாவில், 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிராந்தியவாத நெருப்பை பற்ற வைக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
பேராசிரியர் நாகேஸ்வரின் பேச்சுக்கு பவன் கல்யாண் ஆக்ரோஷமாக எதிர்வினை ஆற்றினார். நாகேஸ்வர், ஆந்திர போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற வதந்திகள் பரவின.
இதை தெலுங்கானா மண்ணின் மைந்தர் மீதான தாக்குதலாகவே உள்ளூர் தலைவர்கள் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்த விவகாரம் ஓய்ந்த நிலையில், தெலுங்கானா உதயமான தினமான கடந்த 2ம் தேதி, அம்மாநிலத்தில் பிரமாண்ட கூட்டத்தை கூட்டப் போவதாக பவன் கல்யாண் அறிவித்தார்.
தடுக்க முடியாது சட்டம் - ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, தெலுங்கானா போலீசார் இதற்கு அனுமதி தர மறுத்ததால், இறுதியில், அது செய்தியாளர்கள் சந்திப்பாக மாற்றப்பட்டது.
இதற்காக பவன் கல்யாண் ஹைதராபாத்துக்கு வருவதற்கு முன்பாகவே, மாநில போக்குவரத்து துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர், அவரை கடுமையாக விமர்சித்தார்.
'பவன் கல்யாணை தெலுங்கானா மண்ணில் கால் வைக்க விட மாட்டோம்' என எச்சரித்தார். தெலுங்கானா காங்., தலைவர் மகேஷ் குமார் கவுடும், இதே தொனியில் பேச, அம்மாநில அரசியல் களம் சூடானது.
அதே சமயம், காங்., தலைவர்களின் இந்த எதிர்ப்புக்கு பவன் கல்யாணும் காரசாரமாக பதிலடி கொடுத்தார்.
'முன்னாள் பிரதமர் இந்திரா, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இருவருமே எம்.பி., தேர்தலின்போது நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து போட்டியிட்டுஉள்ளனர்.
'பயங்கரவாதத்தை விட, பிராந்தியவாதம் ஆபத்தானது. தெலுங்கானா யாருடைய சொத்தும் அல்ல. அது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி. அங்கு யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம்.
'எதிர் காலத்தில் பா.ஜ.,வுடன் சேர்ந்தே ஜனசேனா கட்சி அனைத்து தேர்தலிலும் போட்டியிடும். என்னை யாராலும் தடுக்க முடியாது' என, அவர் கூறினார்.
விமர்சனம் பவன் கல்யாணின் இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து, பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்., கவிதாவின் டி.ஆர்.எஸ்., போன்ற கட்சிகள் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.
தெலுங்கானாவின் கலாசாரம், மொழி மற்றும் வரலாற்று அடையாளத்தை அழித்து, ஆந்திர தலைவர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டினர்.
இதனால், 2014க்கு முந்தைய ஆந்திரா - தெலுங்கானா பிரிவினை காலத்து மனநிலையை மீண்டும் மக்கள் மனதில் விதைக்க கட்சி தலைவர்கள் முயற்சிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
தெலுங்கானாவின் கலாசாரம், மொழி மற்றும் வரலாற்று அடையாளத்தை அழித்து, ஆந்திர தலைவர்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்த முயல்கின்றனர்???என்ன அலப்பறை உளறல் இது தெலுங்கானா ஆந்திராவில் பேசும் மொழி தெலுங்கு தானே???
இதில் என்ன வேறுபாடு??? ராமநாதபுரம் தமிழ் வேறு மதுரை தமிழ் வேறு சென்னை தமிழ் வேறு அதன் வரலாறு வேறு என்று சொல்லி தமிழ்நாட்டை டாஸ்மாக்கினாடு ஆக்கியது போல உள்ளது இது
இரண்டு மாநிலங்களிலும் பல ஒற்றுமை அம்சங்கள் நிலவினாலும் கலாச்சார ரீதியாக பல வேறுபாடுகளும் காணப்படுகின்றன.
இதயெல்லாம் அடக்க
இந்திரா மட்டுமே வல்லமை
படைத்தவர்.
. அதிக ஆட்டம் ஆபத்தில் முடியும்..