'தினசரி 15 ரூபாய் முதல் தங்கத்தை சேமிக்கலாம்'
தங்கத்தை டிஜிட்டல் முறையில் சேமித்து வர்த்தகம் செய்யக்கூடிய எலக்டிரானிக் கோல்டு ரிசிப்ட் எனப்படும் இ.ஜி.ஆர்., கு றித்த நிகழ்வில் பங்கேற்க, என்.எஸ்.இ., தலைமை வணிக மேம்பாட்டு அலுவலர் ஸ்ரீராம் கிருஷ்ணன் கோவை வந்திருந்தார். அப்போது அவர் நமது நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி.



ஏற்கனவே கோல்டு இ.டி.எப்., மியூச்சுவல் பண்டு திட்டங்கள் இருக்கும்போது, ஏன் இ.ஜி.ஆர்., தேர்வு செய்ய வேண்டும்?
30 ஆண்டுகளுக்கு முன் காகித வடிவில் இருந்த பங்குகள் 'டிமேட்' கணக்குகளாக மாற்றப்பட்டதால் சந்தை முதலீடு எளிமையானது. இதை தங்கத்திலும் கொண்டு வர முடியும். செபி விதிகளின்படி, கோல்டு இ.டி.எப்., பண்டுகள், 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன்' அங்கீகரித்த தங்கத்தை மட்டுமே வாங்க வேண்டும். இதனால், இறக்குமதி தவிர்க்க முடியாததாகிறது. இதற்கு பதிலாக, உள்நாட்டு தர அமைப்பான 'இந்தியா குட் டெலிவரி' முறையை அனுமதித்தால் இறக்குமதி தேவை குறையும்.
நம் நாட்டில் வீடுகள் மற்றும் கோவில்களில் தலா 25,000 டன் என மொத்தம் 50,000 டன் தங்கம் உள்ளது. இவ்வளவு இருக்கும்போது ஆண்டுக்கு 700 டன் இறக்குமதி தேவையற்றது; இது அன்னிய செலாவணியை பாதிக்கும் என பிரதமரும் கவலை தெரிவித்துள்ளார்.
மியூச்சுவல் பண்டுகளில் உள்ள தங்கத்தை இ.ஜி.ஆர்., ஆக மாற்றிக்கொள்ளலாம், பொதுமக்கள் நகை தவிர, தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகளை ஒப்படைத்து இ.ஜி.ஆர்., ஆக மாற்றிக் கொண்டால், 6 சதவீதம் வரை வருவாய் கிடைக்கும்.
இந்தியர்கள் தங்கத்தை உணர்வுப்பூர்வ விஷயமாக பார்க்கிறார்கள். அவர்கள் நகைகள் மற்றும் தங்க கட்டிகள் போன்ற நேரடி தங்க முதலீடுகளிலிருந்து டிஜிட்டல் முறைக்கு மாறுவார்களா?
ஏற்கனவே சந்தையில் இருக்கும் டிஜிட்டல் தங்கம் முறைப்படுத்தப்பட்டது அல்ல. ஆனால், இ.ஜி.ஆர்., என்பது செபியால் முறைப்படுத்தப்பட்ட ஒரு பாதுகாப்பான டிஜிட்டல் தங்க முதலீடு.
இன்றைய இளைஞர்களுக்கு தங்க நகைகள் மீது பற்றுதல் இல்லை; அதை ஒரு முதலீடாக தான் பார்க்கிறார்கள். 10 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவிருக்கும் திருமணத்திற்காக இப்போதே நகையாக வாங்கி வைப்பதற்கு பதிலாக, இ.ஜி.ஆர்., திட்டத்தை அவர்கள் பெரிதும் வரவேற்பார்கள்.
நகை கடைகளில் பணத்திற்கு பதிலாக இ.ஜி.ஆர்., மதிப்பில் நகைகளை பெற்றுக்கொள்ளும் நிலை உருவாகும். மேலும், அவசர கடனுக்கு நகையை அடகு வைக்க தேவையில்லை; இ.ஜி.ஆரை அடகு வைத்து சில நொடிகளில் கடன் பெறலாம்.
தற்போது இ.ஜி.ஆர்., 100 மில்லி கிராம் முதல் 1 கிலோ வரையிலான அளவுகளில் திட்டமிடப்பட்டுள்ளது. எனினும், 1 மில்லி கிராம் அளவிலும் கோரிக்கைகள் வந்துள்ளன. இதனால், தற்போதைய விலைப்படி தினசரி 15 ரூபாய் முதலே தங்கத்தை சேமிக்க முடியும். முக்கியமாக, இ.ஜி.ஆருக்கு ஜி.எஸ்.டி., கிடையாது; வாங்குவதும் விற்பதும் மிக எளிது.
இந்தியா முழுதுமாக தங்கத்துக்கு ஒரே விலையை நிர்ணயிக்கும் சக்தி இ.ஜி.ஆருக்கு உண்டா?
இ.ஜி.ஆர்., விலை பெஞ்ச் மார்க்காக மாறும். வெளிநாட்டு முதலீட்டாளர்களை அனுமதிப்பது குறித்து ஆர்.பி.ஐ., பரிசீலிக்கிறது. அவர்களால் தங்கத்தை திரும்ப எடுக்க முடியாது. ஆனால், வர்த்தகம் செய்யலாம். அப்போது, பெரியசந்தையாக உ ருவெடுக்கும்.
தங்கம் விலையை நிர்ணயிக்கும் இடமாக, இந்தியாவின் இ.ஜி.ஆர்., சந்தை மாறும். இவ்வளவு தங்கத்தை பயன்படுத்துவதால் நாம்தான் பிரைஸ் மேக்கராக இருப்போம்.
கடந்த சில ஆண்டுகளில் லட்சக்கணக்கான புதிய முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைக்கு வந்துள்ளனர். அவர்களை வெளியேற விடாமல் நீண்ட காலத்திற்கு இருக்க செய்வது எப்படி?
உள்ளே வருபவர்கள் நீண்ட காலத்துக்கு இருக்கவே செய்கிறார்கள். வெளியேறவில்லை. எவ்வளவோ எப்.ஐ.ஐ.,கள் 2 ஆண்டுகளில் பணத்தை எடு த்து விட்டு வெளியேறியுள்ளனர். ஆனாலும், சந்தை வலுவாக இருக்க காரணம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் நிறைய முதலீடு செய்திருப்பதால் தான். அவர்களது நம்பிக்கைதான் நமக்கு முக்கியம்.
அடுத்த தலைமுறை முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கும்? அவர்களுக்கு ஏற்ப பங்கு சந்தைகள் எப்படி மாற வேண்டும்?
தங்கம் வேண்டும். ஆனால், நகையாக அல்ல என்பதுதான் இளைய தலைமுறையின் எதிர்பார்ப்பு. கிரிப்டோ கரன்சி நிறைய ரிட்டன் கொடுத்துள்ளது. அதுமாதிரி எதிர்பார்க்கின்றனர். சட்டென பணம் சம்பாதிக்க ஆசைப்படுகிறார்கள்.
டிமேட் செய்து ஒரு திட்டத்தை கொண்டு வந்தால், அது அவர்களுக்கு பிடிக்கிறது. டிஜிட்டல் கோல்டும் அதுபோல தான். 'டோக்கனைசேஷன்' என்ற சொல் இப்போது பிரபலம். அதாவது, மிக சிறு, சிறு அளவுகளில் பெரிய பொருளை விற்றால் அதுதான் டோக்கனைசேஷன். 1 மில்லி கிராம் தங்கம்கூட அதற்கு உதாரணம்.
நிதி சேவைகளை ஏ.ஐ., வேகமாக மாற்றி வருகிறது. பங்கு சந்தை செயல்பாடுகளை எப்படி மாற்றப்போகிறது?
சந்தை கண்காணிப்பு பணிகளில் ஏற்கனவே ஏ.ஐ., தொழில்நுட்பத்தை என்.எஸ்.இ., பயன்படுத்துகிறது. விஷயத்தை அது எளிதாக, புரியும் படி சுருக்கி தந்து விடுகிறது.
டெரிவேட்டிவ் வர்த்தகத்தில் என்.எஸ்.இ., முதலிடத்தில் உள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் என்.எஸ்.இ.,யின் மிகப்பெரிய வருவாய் எந்த பிரிவிலிருந்து வரும் என எதிர்பார்க்கிறீர்கள்?
அடுத்த 5 ஆண்டுகளில் நிறைய புது திட்டங்கள் வரும். கடந்த 2 ஆண்டுகளில் கமாடிட்டியில் நிறைய அறிமுகம் செய்திருக்கிறோம். 'டபிள்யூ.டி.ஐ., கச்சா எண்ணெய் ஒப்பந்தம், நேச்சுரல் காஸ் ஒப்பந்தம், புதிதாக ஒரு கச்சா எண்ணெய்' ஒப்பந்தமும் அறிமுகம் செய்திருக்கிறோம். இந்தியன் நேச்சுரல் காஸ் ஒப்பந்தத்தை அறிமுகம் செய்யவிருக்கிறோம். 10 கிராம் கோல்டு திட்டம் 3 மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தோம். இன்னும் வரும்.
சிறு முதலீட்டாளர்களுக்கு உங்கள் ஆலோசனை?
நல்ல நிறுவனத்தின் பங்கு, தங்கம், வெள்ளி என எவ்வளவு முடியுமோ வாங்கி விட்டு, 5 ஆண்டுகள் கழித்து பாருங்கள். தினமும் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்படக்கூடாது. முதலீட்டாளர் என்ற மனப்பான்மை தேவை. டிரேடரின் மனப்பான்மை கூடாது. நாடு வளர்ச்சி பாதையில் செல்கிறது. நிச்சயம் ஏமாற்றம் இருக்காது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement