சட்டசபை தேர்தலில் சரிந்த ஓட்டு சதவீதம்; சங்கத்தினரை சந்திக்க மறுக்கும் சீமான்

6


சென்னை: சட்டசபை தேர்தலில், நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் குறைந்ததால் சங்க நிர்வாகிகளை சந்திப்பதை சீமான் தவிர்த்து வருகிறார்.

சட்டசபை தேர்தலுக்கு முன் அரசு டாக்டர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினர் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஆதரவாக சீமான் குரல் கொடுத்து வந்தார். சீமான் அறிக்கைக்கு அரசு செவிசாய்த்ததால் பெரும்பாலானோர் சீமானை தேடி வந்தனர்.
அதன்படி தாங்கள் முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை அறிக்கை வெளியிட வைத்தனர்.

அவ்வாறு வெளியிடப்பட்ட கோரிக்கைகளுக்கு அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்ற அரசியல்வாதிகளை விட அனைத்து வகை பிரச்னைகளுக்கும் சீமான் குரல் கொடுத்ததால், அவரது ஓட்டு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஏற்கனவே 8.22 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 4 சதவீதமாக குறைந்தது.

இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி ஒரு காரணமாக கூறப்பட்டாலும் தேர்தலுக்கு முன் சீமானின் ஆதரவை தேடி வந்த சங்கத்தினர் ஓட்டு போடாததே முக்கிய காரணம். ஒருவேளை அவர்கள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஓட்டளித்திருந்தால் அக்கட்சியின் ஓட்டு சதவீதம் பாதித்து இருக்காது. தேர்தலில், இந்த சங்கங்கள் நா.த.க.,வை கைவிட்டு விட்டதால், தற்போது எந்த சங்கத்தினர் தன்னை தேடி வந்தாலும், அவர்களை சந்திப்பதை சீமான் தவிர்த்து வருகிறார்.

இது குறித்து நா.த.க., வினர் கூறியதாவது: அனைத்து வகை பிரச்னைகளுக்கும், மக்களுடன் நின்று போராடியவர் சீமான் மட்டுமே. குறிப்பாக, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராடியுள்ளார். தி.மு.க., ஆட்சியில் கைது செய்யப்பட்டு, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டவர்களையும் சீமான் சந்தித்து, அவர்களின் போராட்டங்களுக்கு துணையாக நின்றார்; அவர்களின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுத்தார். ஆனால், அந்த சங்கங்கள் தங்கள் தேவைக்கு மட்டுமே சீமானை பயன்படுத்திக் கொண்டன. இவ்வாறு கூறினர்.

Advertisement