போக்சோ வழக்கில் பிறழ்சாட்சியம்: ஆயுளுக்கு பதில் 20 ஆண்டுகள் சிறை
மதுரை: போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு மனுதாரரே தந்தை என்பதை டி.என்.ஏ., அறிக்கை உறுதிப்படுத்துகிறது.
சிறுமியும் அவரது பெற்றோரும் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றியமைக்கப்படுகிறது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன், 40. இவர், 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த போக்சோ வழக்கில், தேனி விரைவு மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் என்.ஆனந்த் வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்: பாதிக்கப்பட்ட சிறுமியோ அல்லது அவரது பெற்றோரோ அரசு தரப்பின் வழக்கிற்கு ஆதரவாக சாட் சியம் அளிக்கவில்லை. டி.என்.ஏ., அறிக்கையின் அடிப்படையில் மட்டுமே மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது.
அதற்குரிய மாதிரிகள் முறையாக சேகரிக்கப்பட்டதா, நடைமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த சான்றுகள் இல்லை.
டி.என்.ஏ., பரிசோதனை தொடர்பான ஆவணங்கள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே வெளிவந்தன. அந்த ஆவணங்களின் நகல் மனுதாரருக்கு வழங்கவில்லை. விதிக்கப்பட்ட தண்டனை சட்டப்படி நிலைக்கத்தக்கதல்ல. அரசு தரப்பு வழக்கறிஞர் வெங்கடேஷ்:
மாதிரி சேகரிக்கப்பட்ட விதம் மற்றும் அது டி.என்.ஏ.,பரிசோதனைக்காக அனுப்பிய விதம் குறித்து விசாரணை அதிகாரி தெளிவாக விளக்கியுள்ளார். டி.என்.ஏ., அறிக்கையை எதிர்த்து குறுக்கு விசாரணையின்போது விசாரணை அதிகாரியிடம் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பவில்லை. மேல்முறையீட்டில் முகாந்திரம் இல்லை. தள்ளுபடி செய்ய வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: பாதிக்கப்பட்ட சிறுமி, அவரது பெற்றோர் அரசு தரப்பிற்கு எதிரான பிறழ்சாட்சி நிலைப்பாட்டை எடுத்தனர். வாக்குமூலம் மிரட்டல் அல்லது கட்டாயத்தின் பேரில் பதிவு செய்யப்பட்டது என்றும் அவர் கூறவில்லை. அவர் குழந்தையே பிறக்கவில்லை என மறுக்கும் அளவிற்குச் சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தைக்கு மனுதாரரே தந்தை என்பதை டி.என்.ஏ., அறிக்கை தெளிவாக உறுதிப்படுத்துகிறது. டி.என்.ஏ., அறிக்கையை எதிர்த்து வாதிட மனுதாரருக்கு போதிய வாய்ப்பு வழங்கப்பட்டது.
மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியிடமிருந்து மட்டுமல்லாமல், அச்சிறுமிக்கு பிறந்த குழந்தையிடமிருந்தும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. வழக்கின் உண்மைகள், சூழ்நிலைகள், பாதிக்கப்பட்ட சிறுமியும் அவரது பெற்றோரும் பிறழ் சாட்சிகளாக மாறியுள்ளதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனை, 20 ஆண்டுகள் சிறை தண்டனையாக மாற்றியமைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
வேலியே பயிரை அமைந்துள்ளது இந்த வழக்கில் தண்டனை உறுதி செய்யப்பட வேண்டும்