டாஸ்மாக் கடையை மூடக் கோரி மக்கள் சாலை மறியல்: ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
எண்ணுார்:எண்ணுாரில், டாஸ்மாக் கடையை மூடக் கோரி, மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.
சென்னை, எண்ணுார் பேருந்து நிலையம் அருகே, செயல்பட்டு வந்த, 8824 எண் கொண்ட டாஸ்மாக் கடை, தமிழக அரசு உத்தரவு படி, சில வாரங்களுக்கு முன் மூடப்பட்டது.
அக்கடையில் இருந்து, 50 மீட்டர் தொலைவில், சர்ச், மருத்துவமனை அருகே செயல்பட்டு வரும், 8825 எண் கொண்ட டாஸ்மாக் கடையும் மூடப்பட வேண்டிய பட்டியலில் இருந்தும் மூடவில்லை என கூறப்படுகிறது.
எண்ணுாரில் செயல்படும் ஒரே கடை என்பதால், மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. சிலர் மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்துறங்குவது, ரகளையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால், பெண்கள் அச்சமடைந்துள்ளனர்.
காலை, பள்ளி செல்லும் மாணவியரும், தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளி, உறவினர்களுக்கு மிகுந்த சிரமம் மேற்கொள்கின்றனர். எனவே, 8825 எண் கொண்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கோரி, நேரு நகர் மக்கள், நேற்று மதியம், கத்திவாக்கம் நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, டாஸ்மாக் கடையை மூடக்கோரி, கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஒரு மணி நேரம் நீடித்த மறியலால், போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியது. தகவலறிந்து அங்கு வந்த எண்ணுார் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.
இது குறித்து நேரு நகரை சேர்ந்த நிலவழகன் கூறுகையில், மூட வேண்டிய, 717 கடைகளில், எண்ணுாரின் இரண்டு கடைகளும் உள்ளன. மாறாக ஒரு கடையை மட்டும் மூடிவிட்டு, இந்த கடையை மூடாமல் விட்டனர். இதனால், பள்ளி மாணவியர், பெண்கள் கடும் சிரமம் அடைகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை மூட வேண்டும். குறைந்தபட்சம் இடமாற்றமாவது செய்ய வேண்டும், என்றார்.