தி.மு.க.,வில் இணைந்தார் செய்யூர் மாஜி எம்.எல்.ஏ.,

செய்யூர்:வி.சி.க.,வில் இருந்து விலகிய முன்னாள் செய்யூர் தொகுதி எம்.எல்.ஏ., - பாபு, தி.மு.க.,வில் இணைந்தார்.

வி.சி.க., கட்சியின் முதன்மை செயலராக இருந்தவர் பாபு. இவர், 2021 சட்டசபை தேர்தலில் வி.சி.க., சார்பில் செய்யூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., வாக இருந்தார். 2026 சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

வி.சி.க., தலைமை செய்யூர் தொகுதியில் போட்டியிட சிந்தனைச்செல்வனை தேர்வு செய்தது. இதனால், அதிருப்தியடைந்த பாபு,கட்சியினருடன் இருந்த தொடர்பை துண்டித்து, சட்டசபை தேர்தலில் பணியாற்ற மறுத்துள்ளார். மேலும், செய்யூர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது பாபுவிற்கும், வி.சி.க., பிரமுகர்களுக்கும் இடையே உட்கட்சி மோதல் நிலவியது.

இதனால், கடந்த மாதம் 24ம் தேதி வி.சி.க.,வில் இருந்து விலகுவதாக பாபு அறிவித்தார்.

அதன்பின் அவர் வெளியிட்ட அறிக்கையில், வி.சி.க., தலைவர் திருமாவளவன் முன்னுக்கு பின் முரணாக பேசி வருவதாகவும், குழப்பமான தலைமை பண்புடன் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். த.வெ.க.,வுக்கு - வி.சி.க., ஆதரவு கொடுத்ததையும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில், காலை, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் தி.மு.க.,வில் இணைந்தார்.

மேலும் தி.மு.க.,வில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யும்போது, ஒருங்கிணைந்த மதுராந்தகம், செய்யூர் சட்டசபை தொகுதி மாவட்ட செயலாளர் பதிவிக்கு காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement