கோட்டக்குப்பம் அருகே சுடுகாடு பிரச்னை: 30 மீனவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே சுடுகாடு பிரச்னையில் இறந்தவரின் உடலைப் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினரைத் தாக்கிய மீனவர்கள் 30 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சிக்குப்பட்ட பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர் பகுதியில் 750க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியின் அருகே நடுக்குப்பம் மீனவ கிராமம் உள்ளது.
இங்கு ஏராளமான குடும்பத்தினர் வசிக்கின்றனர். பெரிய கோட்டக்குப்பம் ஆதிதிராவிடர்களுக்கு, நடுக்குப்பம் கடற்கரை அருகே ஒரு ஏக்கர் இடத்தில் சுடுகாடு உள்ளது. இந்த இடத்தில் நடுக்குப்பம் மீனவர்கள், தங்களது மீன்பிடி படகுகளை நிறுத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பெரிய கோட்டக்குப்பம் பகுதியில் இறந்த ஒருவரின் உடலைப் புதைக்க ஆதிதிராவிடர் மக்கள் சென்றபோது, நடுக்குப்பம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மோதல் ஏற்பட்டது.
நடுக்குப்பம் மீனவர்கள், கற்கள் மற்றும் ஆயுதங்களால் சராமாரியாக தாக்கினர். அதில் மீனவர் பகுதியைச் சேர்ந்த 4 பேரும், போலீஸ்காரர்கள் 4 பேரும் காயமடைந்தனர்.
அதனை கண்டித்தும், மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆதிதிராவிடர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கோட்டக்குப்பம் போலீசார் நடுக்குப்பம் மீனவர்கள் 30 பேர் மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர். மேலும் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.